வாழப்பாடியார்: காவிரி உள்ளவரை நிலைத்திருக்கும் பெயர்!

ப. ராஜேந்திரன்

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், அமரர் வாழப்பாடியாரின் 80-வது பிறந்தநாள் இன்று.

சேலம் மாவட்டத்தில் ஒரு எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, பலமுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி, வாராது வந்த மாமணி போன்ற மத்திய அமைச்சர் பதவியை, காவிரி பிரச்சினைக்காக துச்சமென தூக்கி எறிந்தவர்.

நாக்கை வெட்டிக் கொடுத்தாவது நாவுக்கரசர் பட்டம் வாங்க நினைக்கும் அரசியல் உலகில், தமிழக மக்களின் உரிமை பிரச்சினைக்காக, தனக்கு முதன் முதலில் கிடைத்த மத்திய அமைச்சர் பதவியை தூக்கி கடாசினார்.

அதனால்தான் இன்றும் மக்கள் மனதில் வாழும் தலைவர் வாழப்பாடியாராக நிலைத்து நிற்கிறார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. அதனால்தான் தொடர்ந்து ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி வாகை சூடினார்.

ஒரு தொழிற்சங்க தலைவராக இருந்து, அவர் ஆற்றிய பணிகளும், பதித்த முத்திரைகளும் ஏராளம். காங்கிரஸ் தொழிற்சங்கத்தை சேர்ந்த அவருக்கு, இடதுசாரி தொழிற்சங்கங்கள் எல்லாம் பாராட்டி தீர்மானம் போடும் அளவுக்கு, தொழிலாளர்களின் மனசாட்சியாக திகழ்ந்தவர் அவர்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன நாள்தொட்டு, அவர் அலுவலகத்திற்கு வரும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அனைத்தையும், பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்..

கோரிக்கை மனு அளித்தவருக்கும் அதன் நகல் கடிதம் மூலமாக போய் சேரும். அலுவலக சான்றுக்கும் ஒரு நகல் வைக்கப்படும். இது அவருடைய இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

முன் பின் அறிந்தவர்கள் மட்டுமல்லாது, முகமறியா பலருக்கும் அவரது உதவிகள் சென்று கொண்டே இருந்தன. மாதா மாதம், அவர் அனுப்பும் மணி ஆர்டர்களே அதற்கு சான்று.

தொண்டர்களை தேடிப்போய் சந்திப்பது, அவர்கள் குடும்பத்தில் நல்லது கெட்டதுகளில் பங்கேற்பது. தேவையான உதவிகளை வழங்குவது என தொடர்ந்த பணி, அவர் இறப்புவரை ஓயவே இல்லை.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்தவர். லேடஸ்ட் புத்தகங்கள் வரை படித்து முடித்திருப்பார். உலக அரசியல் தொடங்கி, உள்ளூர் அரசியல் வரை விரல் நுனியில் வைத்திருப்பார்.

சொந்த ஊரான வாழப்பாடிக்கு, காரில் செல்லும் ஒவ்வொரு முறையும், விழுப்புரம் ரயில்வே கேட் அருகில், கொய்யா பழங்களை விற்பனை செய்யும் அனைவரையும் அன்போடு விசாரித்து, அவர்கள் அனைவரிடமும் பழங்களை வாங்கி, அவரும் சாப்பிடுவார், வழியில், வீட்டில் சந்திப்பவர்களுக்கும் கொடுப்பார்.

காங்கிரஸ் என்றாலே பணக்காரர்கள் சூழ்ந்த கட்சி என்ற நிலையை மாற்றி, தொண்டர்களின் கட்சி என்பதை அவர் நிரூபித்தார்.

வாழப்பாடியார் சந்திப்பு என்றாலே, பத்திரிகையாளர்களுக்கு அப்படி ஒரு கொண்டாட்டம். அவரைப்போல தலைப்பு செய்திகள் யாராலும் கொடுக்க முடியாது.

அதனால்தான், எங்கேடா காங்கிரஸ்.. ஏதடா காங்கிரஸ் என்று கேட்டவர்களுக்கு… இதுதாண்டா காங்கிரஸ் என்று உரக்க சொல்லி உணர்த்தியவர் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பெருமிதத்துடன் கூறுவார்கள்.

சர்வதேச தோட்ட தொழிலாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக, பல முறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பெருமை இவரையே சாரும்.

உலகில் யாருமே சந்திக்க முடியாத, ஈராக் அதிபர் சதாம் உசேனை, நேரடியாக சந்தித்து கைகுலுக்கியவர்.

அணிசேரா நாடுகளுக்கான கல்வி அமைப்பு ஒன்றை உருவாக்கி, அந்த அமைப்பே, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாகும் அளவுக்கு, அதன் பணிகளை செவ்வனே ஆற்றியவர்.

ஒவ்வொரு மாநிலமும், உள்ளாட்சி தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்முயற்சி எடுத்து நிறைவேற்றியவர்.

எதற்கும் கலங்காத அவரது நெஞ்சுரம், சில துரோக செயல்களால் கலங்கியது உண்டு. ஆனாலும், உடனுக்குடன் மீண்டெழுந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். மரணம் ஒன்றே, அவரை இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலைக்கு கொண்டு சேர்த்து விட்டது.

வாழப்பாடியாரின் ஆளுமையை, சேவையை, மக்கள் தொண்டை பக்கம் பக்கமாக நாள் கணக்கில் சொல்லிக்கொண்டே இருக்கலாம். காலத்தால் அழியாத ‘காவிரியின் காவலன்’ என்ற அவரது தியாகம் மட்டும், காவிரி இருக்கும் வரை ஓயாமல் பேசப்படும்.