ரஜினி தலைமையில் காங்கிரஸ் உருவாக்கும் புதிய அணி: தீவிர முயற்சியில் ப.சிதம்பரம்!

ரஜினி என்ற சினிமா புயல் அரசியலில் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருந்தாலும், இன்னும் வீச தொடங்கவில்லை.

அதற்கான ஏற்பாடுகள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வழியில், தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கலைஞர் உடல் ரீதியாக இயங்கமுடியாத் நிலையில், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ரஜினி, விரைவில் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.

கலைஞர் மறைவுக்கு பின்னரும், ரஜினி இன்னும் அரசியலில் இறங்குவதற்கான வெளிப்படையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அரசியல் வெற்றிடம் உருவாகி உள்ளது என்ற கூறிய காலகட்டத்திலேயே, தமது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமும், தமிழகத்தில் அனைத்து கட்சிகளிலும் உள்ள தமது நண்பர்களான மூத்த அரசியல்வாதிகளிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.

அதில் முக்கியமானவர், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம்.

1996 ல், காங்கிரசில் இருந்து மூப்பனார் தமாகா என்ற கட்சியை தொடங்குவதற்கும், அக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததற்கும், ரஜினி அன்று கொடுத்த வாய்சே முக்கிய காரணமாக அமைந்தது.

அன்று முதல் ப.சிதம்பரத்துடன் தொடங்கிய ரஜினியின் நட்பு, தொடர்ந்து வலிமையான நட்பாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

2017 ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கப்போவதாக ரஜினி வெளியிட்ட அறிவிப்பை  தொடர்ந்து, ரஜினியும், ப.சிதம்பரமும் தொடர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருந்தனர்.

ரஜினி கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவர் வழிகாட்டுதலின்படி, கட்சி மற்றும் ஆட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து, ப.சிதம்பரமே செயல்படுவார் என்றும் பேசப்பட்டது.

ஆனால், ரஜினியுடன், ப.சிதம்பரம் நெருங்கிவிட கூடாது என்று விரும்பிய மத்திய அரசு, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தி வழக்கு தொடுத்து நெருக்கடிகளை கொடுத்தது.

அதன் காரணமாக, அந்த முயற்சியில் சில தொய்வுகள் ஏற்பட்டன. ரஜினியும், சில காலம் அரசியல் பற்றி பேசாமல் இருந்தார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது, ரஜினியால் நேரடியாக ப.சிதம்பரத்துடன் பேச முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ப.சிதம்பரம் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசி வந்தார்.

இதையடுத்து, தற்போது ரஜினி, ப.சிதம்பரம் இடையேயான பேச்சு வார்த்தை தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.

தற்போது, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து, ரஜினியை முன்னிலைப்படுத்தி, 1996 ம் ஆண்டைப்போல, ஒரு புதிய அரசியல் அணியை உருவாக்க ப.சிதம்பரம் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், ரஜினி தலைமையில், காங்கிரஸ் பின்னணியில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினால், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள பல முக்கிய கட்சிகள், இந்த கூட்டணிக்கு வர தயாராக உள்ளன.

அத்துடன், திமுக மற்றும் அதிமுகவில் இருந்தும் பல முக்கிய பிரமுகர்கள், ரஜினியோடு இணைந்து அரசியலில் பயணப்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால், இரு கட்சிகளிலுமே பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் – திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விட்டாலும், அதிகாரப்பூர்வமாக இன்னும் கூட்டணி முறிவு அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பு வெளியானவுடன் ரஜினி உருவாக்கும் புதிய அரசியல் அணி பற்றிய அறிவிப்பும் வெளியாகி விடும்.

இந்த புதிய அணி, அதிமுக, திமுக அல்லாத அணியாக இருக்கும். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய புள்ளிகள் சிலர், இந்த அணிக்கு வந்து விடுவார்கள் என்பதே, இப்போதைக்கு உள்ள நிலவரம்.

எனினும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக? ரஜினி தலைமையில், பாஜக அல்லாத புதிய அணி உருவாவதை, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா? என்ற ஒரு கேள்வியும் எழாமல் இல்லை.

ரஜினியும், சிதம்பரமும் அதை யோசிக்காமலா இருப்பார்கள்? அனைத்தையும் யோசித்துதான், இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

பாஜகவின் எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும், எப்படி சமாளிப்பது என்று  அவர்களுக்கு தெரியும் என்று கூறுகின்றனர், காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள்.

எனவே வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி விட்டன என்றே சொல்லப்படுகிறது.