மேற்குவங்க கவர்னராக சுப்ரமணியசாமியை நியமிக்க திட்டம்: சமாளிப்பாரா மம்தா!

நாட்டின் பொருளாதார சிக்கல் குறித்து, புள்ளி விவரங்களுடன், மோடியின் மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பவர்கள் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், பாஜகவை சேர்ந்த சுப்ரமணியசாமியும்தான்.

இதில் சிதம்பரம் எதிர்கட்சியான காங்கிரசை சேர்ந்தவர். சுப்ரமணிசாமியோ ஆளும் பாஜகவை சேர்ந்தவர். இதில் சிதம்பரத்தை சமாளிக்கும் பாஜக, சுப்ரமணியசாமியை சமாளிக்க முடியாமல் தவிக்கிறது.

சுப்ரமணியசாமியை எதிர்க்க முடியாத பாஜக, அவரை கூல் செய்ய முயற்சித்து வருகிறது. அவரோ, மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாது என்று நேரடியாகவே விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், சுப்ரமணியசாமியை சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த பாஜக மூத்த தலைவர்கள் பலர், அவரை மேற்கு வாங்க கவர்னராக நியமிக்கலாம் என்று யோசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில், வலுவான கவர்னர்களை நியமித்து, முதல்வர்களுக்கு நெருக்கடி கொடுத்து வரும் பாஜக, மேற்கு வங்கத்தில் சுப்ரமணிய சாமியை கவர்னராக நியமித்து அம்மாநில முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைக்கின்றனர்.

ஒருபக்கம், பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்குக்கும் மம்தாவுக்கு நெருக்கடி கொடுப்பது போலவும் இருக்கும், மறுபக்கம் சுப்ரமணியசாமியை கூல் செய்வது போலவும் இருக்கும் என்பதே அந்த திட்டம்.

ஏற்கனவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், துணைநிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி, அங்குள்ள நாராயணசாமியின் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது போல, மேற்கு வங்கத்தில், மம்தா அரசுக்கு சுப்ரமணியசாமி நெருக்கடி கொடுப்பார்.

இதன்மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம். இதற்கு, பாஜகவின் முக்கிய முடிவுகளுக்கு பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் ஒப்புதல் வழங்குமா? என்பதும் ஒரு பிரச்சினையாக உள்ளது.

எனவே, இது குறித்து, பாஜக மூத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

எனினும், இதுகுறித்து முழுமையான முடிவு இன்னும் எடுக்கப்படாமல், இன்னும் விவாத நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.