கூட்டணி கட்சியை  ஓங்கி அடிக்கும் திமுக: தாங்கி பிடிக்கும் அதிமுக!

தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடக்க, இன்னும் ஒரு வருடமே உள்ளது. அதற்குள், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், திமுக, அதிமுக கூட்டணியில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, உரிய அளவில் இடப்பங்கீடு வழங்கவில்லை என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பல இடங்களில் குற்றம் சாட்டியது.

ஆங்கில புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற, பாமக நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், பாமகவின் தயவு இல்லை என்றால் அதிமுக ஆட்சியே இல்லை என்று வெளிப்படையாகவே பேசினார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நடந்து கொண்டது குறித்தும் தமது கோபத்தை நேரடியாகவே வெளிப்படுத்தினார்.

இவ்வாறு, திமுக – அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் ஆங்காங்கே பல உரசல்களும், விரிசல்களும் நடந்தன.

ஆனால், தேர்தல்கள் முடிந்தவுடன் இப்பிரச்சினைகள் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, அதன் கூட்டணி கட்சிகளில், பாமகவுக்கு ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. மூன்று துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன.

அதேபோல், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிகள், பாஜக, தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு ஓரளவு இடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கூட்டணி கட்சிகளை அதிமுக ஓரளவு சாந்தப்படுத்தி விட்டது.

மேலும், பாமக தயவு இல்லாமல் அதிமுக ஆட்சி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசியதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, பாமக தொண்டர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு பேசியிருக்கலாம் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால், திமுகவை பொறுத்தவரை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளில் ஒரு இடத்தை கூட கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவில்லை.

ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளிலும் சொற்ப அளவிலேயே கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தலுக்கு முதல்நாளில், கூட்டணி தர்மத்தை திமுக  மீறிவிட்டதாக காங்கிரஸ் சார்பில் வெளியான அறிக்கை, திமுகவில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தை புறக்கணிக்கும் அளவுக்கு, திமுகவை சீண்டியுள்ளது அந்த அறிக்கை.

அதன் தொடர்ச்சியாக, வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்ற  திமுக பொருளாளர் துரைமுருகனின் பேட்டி, காங்கிரஸ் தொண்டர்களை மிகவும் சூடேற்றி உள்ளது.

அதற்கு கார்த்தி சிதம்பரம், நேரடியாகவே எதிர்வினை ஆற்றியுள்ளார். மேலும் பலரும், சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் சிக்கல் என்றே தெரிகிறது.