ஓவியர் வீரசந்தானம் நடித்து 7 சர்வதேச விருதுகள் பெற்ற  ‘ஞானச்செருக்கு’: விரைவில் திரைக்கு வருகிறது!

மறைந்த ஓவியர் வீரசந்தானம் நடித்த ‘ஞானச்செருக்கு’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கிரவ்டு பண்டு என்ற கூட்டு தயாரிப்பில், இந்தப்படத்தை தரணி ராஜேந்திரன் என்பவர் இயக்கி உள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவின் வெகுவான பாராட்டுக்களை பெற்றுள்ள இந்தப்படம் குறித்து, அதன் இயக்குனர் தரணி ராஜேந்திரன் கூறியுள்ள தகவல்கள் வருமாறு:-

ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர்  ‘ஞானச்செருக்கு’ படத்தில் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வாங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் வெளியாகவில்லை.

பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.

சினிமாவில் உதவி இயக்குநராகச் சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீரசந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.

இந்தக்கதையைப் படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்று கூட பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்து பார்ப்போம் என்று நினைத்தேன்.

அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையைக் கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.

எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்த படத்தை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.. அந்த படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர்.

அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் போட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்கு தெரியாது ஆனால் படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்து திட்டினார்.

பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம் எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று ஓவியர் வீரசந்தானம் சொல்லி விட்டார்.

இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்த படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட்.

இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.

அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்.

இந்த படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும் இந்த படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்த படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

இயக்குநர் பாரதிராஜா இந்த படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துக் கைகொடுத்துப் பாராட்டினார்.

பாரதிராஜாவைப் பொருத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம். அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது.

இது வெகுஜன படம்தான். இந்த படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்த படம். இவ்வாறு தரணி ராசேந்திரன் தெரிவித்துள்ளார்