திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அரவணைக்கும் அழகிரி – தவிர்க்கும் துரைமுருகன்!

உள்ளாட்சி தேர்தலில், சொந்த கட்சியினரையும் கட்டுப்படுத்த முடியாது, கூட்டணி கட்சியினரையும் திருப்தி படுத்த முடியாது என்பது, கடந்த கால தேர்தல்கள் சொல்லும் பாடம்.

அதன் காரணமாகவே, மூன்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே விருப்பம் இல்லாமல் இருந்தது.

எனினும், நீதிமன்ற உத்தரவை தவிர்க்க முடியாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது, அதிமுகவுக்கு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலை ஒப்பிடும்போது, திமுகவுக்கும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலே, இவ்விரு கட்சிகளுக்கும் முக்கியம் என்பதால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே, விரிசலை ஏற்படுத்தி விட்டது.

உள்ளாட்சி தேர்தலில், திமுக தனது கூட்டணி தர்மத்தை மீறி விட்டது என்று, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, திமுகவில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

மறுபக்கம், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் இருவர், அதிமுகவுக்கு ஆதரவளித்ததால், திமுக அங்கு தோற்றது. இதுவும், காங்கிரஸ் மீது திமுகவின் கோபத்தை அதிகப்படுத்தி விட்டது.

இதனால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டிய கூட்டத்தில், திமுக பங்கேற்காமல் புறக்கணித்தது.

இதற்கு பதில் அளித்திருந்த, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு காலம்தான் பதில் சொல்லும் என்று மேலோட்டமாக கூறி இருந்தார்.

ஆனால், புதன்கிழமை வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன்,. திமுகவில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த பிரச்சினையால், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி, எனது கருத்தால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி உள்ளார்.

கூட்டணியை அரவணைக்கும் விதமாக கே.எஸ்.அழகிரி பேசுகிறார். அறுத்துவிட தயாராக இருப்பதுபோல துரைமுருகன் பேசுகிறார்.

துரைமுருகனின் இந்த ஞானம், கடந்த வேலூர் இடைத்தேர்தலின்போது எங்கே போனது என்று, கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதனால், கூட்டணியின் நிலை எப்படி உள்ளது? என்பது பலருக்கும் குழப்பமாகவே உள்ளது.

2009  மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதனால், மத்திய அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது.

ஆனால், அந்த ஆட்சியின் இறுதி காலத்தில் ஏற்பட்ட சிக்கல், கூடா நட்பு கேடாய் முடியும் என்றெல்லாம் பேசப்பட்டது. அதனால் 2014, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை.

மேலும், இரு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 37 தொகுதிகளில் அதிமுக வென்றது. பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தை பிடித்தன.

அந்த தேர்தலில், திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. திமுகவுக்கு  26.8 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு  4.3 சதவிகித வாக்குகளே கிடைத்தன.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டே இரு கட்சிகளும் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளன.