திமுக – காங்கிரஸ் உரசல்: அழகிரியை டெல்லிக்கு அழைத்த சோனியா காந்தி!

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்தை திமுக மீறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை கடந்த 10 ம் தேதி வெளியிட்டிருந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு போதுமான அளவு உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. அத்துடன் ஒதுக்கப்பட்ட இடங்களிலும், திமுகவை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர் என்பது காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

அதற்கேற்ப, மறுநாள் நடைபெற்ற மறைமுக தேர்தலில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளில், ஒரு இடத்தை கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கவில்லை.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் இரண்டு கவுன்சிலர்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். அதனால், அங்கு திமுக தோற்றது. மேலும், துணைத்தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதேபோல், பல இடங்களில் காங்கிரஸ் திமுக இடையே கூட்டணி தர்மத்தை மீறி, வெற்றி தோல்விகள் அமைந்தன.

மறைமுக தேர்தலுக்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியின் அறிக்கையால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. ப.சிதம்பரம் அதை தணிக்கும் வகையில் தெரிவித்த விளக்கமும் பெரிதாக எடுபடவில்லை.

இந்த நிலையில், டெல்லியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று  நடந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது.

ஆனாலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து, திமுக சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதே போல், திமுகவின் அதிகாரபூவ நாளேடான முரசொலியிலும், இது குறித்து விளக்கங்கள் எதுவும் இல்லை.

இந்த விவகாரம், திமுக – காங்கிரஸ் கூட்டணியின் விரிசலை பொது வெளியில் அடையாளம் காட்டி விட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைமை, கே.எஸ்.அழகிரியை இன்று டெல்லிக்கு அழைத்துள்ளது.

திமுகவுடன் அனுசரித்து போகச்சொல்லி, தமிழக காங்கிரஸ் தலைமைக்கு டெல்லி அறிவுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், திமுகவினர் மத்தியில் காங்கிரஸ் கட்சியை கொஞ்சம் தட்டியே வைக்க வேண்டும் என்ற மனநிலை உள்ளது.

இனி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 50-60 சீட்டுக்களை எதிர்பார்க்கும். அதனால், இப்போதே, அதை கூட்டணியில் இருந்து கழட்டி விடலாம் என்று திமுகவில் உள்ள சிலர் கூறி வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்கு வங்கியுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அங்கு திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

அதே சமயம், அமமுக தனித்து நின்றால், அங்கே அதிமுக வாக்குகள் கொஞ்சம் பிரிந்து அது, திமுகவுக்கு சாதகமாக மாறும் என்பதையும் கணக்கில் வைத்து பேசி வருகின்றனர் திமுகவினர்.

அதனால், திமுகவை அனுசரித்து செல்லும் தமிழக காங்கிரஸ் தலைமையே, இப்போதைய டெல்லியின் தேவை. அதற்கு, ஒத்து வரவில்லை என்றால், தமிழக காங்கிரஸ் தலைமையிலும் மாற்றம் வரலாம் என்று இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

டெல்லியை பொறுத்தவரை, மத்தியில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு, மாநிலத்தில் உள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியம். அதேபோல், உள்ளாட்சி பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விட, மக்களவை உறுப்பினர்களே முக்கியம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே, டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.