அதிமுக – திமுக கூட்டணிகளுக்கு பாஜக தரும் நெருக்கடி: அடக்கி வாசிக்க உத்தரவு!

இரு வெவ்வேறு கூட்டணி கட்சிகளுக்கு, ஒரே கட்சி நெருக்கடியை கொடுக்க முடியும் என்றால் அது பாஜகவாகத்தான் இருக்க முடியும்.

அதனால், கூட்டணி கட்சிகள் குறித்து, அவரவர் இஷ்டப்படி கருத்து சொல்லக்கூடாது என்று அதிமுக தலைமை தமது கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டணி குறித்த குறைகளை பொது வெளியில் பேசக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்பது, சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு வந்தால், அது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும். சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்த ஓரளவு உதவியாக இருக்கும்.

ஆனால், தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல், ஓராண்டுக்குள் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் நடத்தப்பட்டதால், எந்த கட்சியாலும், சொந்த கட்சியினரையோ, கூட்டணி கட்சியினரையோ முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.

அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜாவின், உறவினர்கள் இருவருமே உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவினர். இதையடுத்து, சிறுபான்மையினர் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று அன்வர் ராஜா, ஒரு பேட்டியில் கூறி இருந்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற கருத்துக்களை, பொது வெளியில் சொல்லக்கூடாது என்று, அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு பதில் கூறி இருந்தார்.

அதேபோல், அமைச்சர் நிலோபர் கபில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தமக்கும் அச்சம் இருப்பதாக கூறி இருந்ததும், அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கூட்டணி குறித்து, யாரும் தங்களது கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவருமே கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

இதற்கு பின்னால், பாஜகவின் கடுமையான அழுத்தம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதேபோல், ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் நடைபெற்றதற்கு முதல்நாள், கூட்டணி தர்மத்தை திமுக மீறி விட்டதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இந்த அறிக்கையும், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், இது மிரட்டல் அல்ல, ஆதங்கம்தான் என்று அறிக்கை விட்டு, கூல் செய்திருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

சில நாட்களுக்கு முன்பாக, தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை, திமுக எம்பிக்கள் குழு பிரதமரை சந்தித்து நேரில் வழங்கியது.

அப்போது, பிரதமர் மோடி, இன்னும் ஏன்? காங்கிரசை தூக்கி சுமக்கிறீர்கள். அது நாட்டுக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இதை சுட்டிக்காட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை, கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார் சிதம்பரம்.

இப்படி, அதிமுக, திமுக என இருவேறு கட்சிகளும், கூட்டணி கட்சிகளும், ஏதோ ஒரு விதத்தில், பாஜகவுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன என்பதுதான் இன்றைய நிலை.

அத்துடன், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால், அதற்குள் கூட்டணிக்குள் எந்தவித சலசலப்பும் இல்லாமல், இதே நிலையில் தொடருவதுதான் நல்லது என்று, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே விரும்புகின்றன.

இந்த நிலையில், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் கட்சியை சேர்ந்தவர்களோ, கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களோ, அவரவர் விருப்பத்திற்கு கருத்துக்களை சொன்னால், அது, சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை பாதிக்கும் என்பதை அனைவருமே உணர்ந்துள்ளனர்.

இதன் காரணமாகவே, ஒவ்வொரு கட்சியும், அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள், பொது வெளியில் பேசுவதற்கு தடை விதித்துள்ளன.