கூட்டணி கட்சிகளுக்கு தாராளம் காட்டிய அதிமுக: சிக்கனம் பிடித்த திமுக!

ஊரக உள்ளாட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய பொறுப்புக்கள் வழங்கியதில் அதிமுக ஓரளவு தாராளம் காட்டிய நிலையில், திமுக மிகவும் சிக்கனமாக நடந்து கொண்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் 12 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஆனால், அவற்றில் ஒரு துணைத்தலைவர் பதவியை கூட கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவில்லை.

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில், 125  இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 5 இடங்களையும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களையும் ஒதுக்கி உள்ளது.

ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளில் 107 இடங்களில் திமுகவே வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 8 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட்,  மதிமுக,  விசிக,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளுக்கு தலைவர்,  துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றைக் கூட வழங்கவில்லை.

ஆனால், அதிமுகவை பொறுத்தவரை, 13 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. அதன் கூட்டணி கட்சியான பாமகவுக்கு சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை ஒதுக்கி உள்ளது.

மாவட்ட துணைத் தலைவர் பதவிகளில் பாமக மற்றும் பாஜகவுக்கு தலா 3, இடங்களையும், தேமுதிகவுக்கு ஒரு இடத்தையும் அதிமுக வழங்கியுள்ளது.

அதேபோல், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு ஓரளவு இடங்களை ஒதுக்கி உள்ளது அதிமுக.

அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிடைத்த  பாமகவின் வாக்குகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கிடைத்த பாஜகவின் வாக்குகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணி கட்சிகளுக்கு, ஓரளவு தாராளம் காட்டியுள்ளது அதிமுக.

ஆனால், திமுகவை பொறுத்தவரை, மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளில், கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை.

ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் மிகவும் சிக்கனத்தையே கடை பிடித்துள்ளது.

எனவே, அடுத்து 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில், திமுக கூட்டணி கட்சிகள், போதுமான அளவு ஒத்துழைப்பை தருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது, அடுத்தாண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், கூட்டணி விஷயத்தில் திமுகவும், கொஞ்சம் தாராளம் காட்டினால் நல்லது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.