சிறையில் இருந்து மீண்டு வந்து அதிமுகவை  கைப்பற்றுவாரா சசிகலா? குழப்பத்தில் ஆதரவாளர்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்று வரும் பிப்ரவரியுடன் மூன்று ஆண்டுகள் ஆகப்போகின்றன.

அவர், சிறை தண்டனை முடிந்து மீண்டும் வந்து தீவிர அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது மேலும் சில வழக்குகளில் சிக்குவாரா? என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர். பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஆட்சியை தொடர செய்து, அதை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கணக்குப் போட்டது பாஜக.

ஆனால், அதையும் மீறி கட்சியையும், ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் வெற்றி கண்டார் சசிகலா.

அதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் நான்காண்டுகள் சிறை செல்ல வேண்டிய தீர்ப்பு வெளியானது.

அதனால், தமக்கு விசுவாசமாக தெரிந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிவிட்டு சிறை சென்றார் சசிகலா.

ஆனால், எடப்பாடியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாஜக, பன்னீர்செல்வத்தையும் அதிமுகவில் இணைத்து, அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

தற்போது, கட்சி, ஆட்சி ஆகிய ஆகிய இரண்டுமே சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.

ஆனால், சசிகலா சிறையில் இருந்து திரும்பி வந்ததும், அவர் கட்சியை கைப்பற்றுவார் என்று அதிமுகவில் இருந்த அவருக்கு ஆதரவான பலர் நம்பிக்கொண்டு இருந்தனர்.

அது இப்போது சாத்தியம் இல்லை என்ற நிலையே தெரிகிறது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து சிறை தண்டனை முடிந்து சசிகலா வெளியில் வந்தாலும், அவர் மீண்டும் சிறை செல்வதற்கான பல வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.

பண மதிப்பு இழப்பு சமயத்தில், வாங்கப்பட்ட சொத்துக்கள், வெளிநாடுகளில் வாங்கப்பட்ட சொத்துக்கள் என அவர் மீது பல்வேறு வழக்குகள் பாய்வதற்கு தயாராக இருக்கின்றன.

அதனால், சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதா? கட்சியை கைப்பற்றுவதா? எஞ்சிய காலத்தை அமைதியாக கழிப்பதா? என்பன போன்ற கேள்விகள் தற்போது அவர் முன்னே நிற்கின்றன.

பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவை, பாஜகவின் முக்கிய பிரமுகர்கள், சந்திரலேகா போன்றவர்கள் சந்தித்து பேசி, சிலவற்றை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், அவற்றுக்கெல்லாம் சசிகலா சம்மதிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. குறிப்பாக குவிக்கப்பட்ட சொத்துக்களை, விட்டுக்கொடுப்பதற்கு, அவர் தயாராக இல்லை.

என்னதான் தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர், பாஜகவுக்கு எதிராக அடக்கி வாசித்தாலும், மேலிடத்தின் கட்டளையை சசிகலா  ஏற்க மறுத்துவிட்டார்.

அதனால், கண்டிப்பாக சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், மற்ற வழக்குகளில் மீண்டும் சிறை செல்வதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்றே சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர், அவரது குடும்ப உறுப்பினர்கள் சசிகலாவை சந்தித்து, திருமணம் நடத்தி வைக்க சொல்லும்போது, தன்னை எதிர்பார்க்காமல், நடக்க வேண்டிய காரியங்களை நடத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆயுள் வரை சிறையில் இருந்தாலும், சொத்து மற்றும் பண சம்பந்தமான எதையும் அவர் இழக்க தயாராக இருப்பதாக தெரியவில்லை.

அதன் காரணமாக, சசிகலா சிறையில் இருந்து மீண்டும் அரசியலுக்கு திரும்புவது என்பது மிகவும் கடினம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அதனால், சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதே கடினம். அப்படியே வந்தாலும், அதிமுகவை கைப்பற்றுவது எல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதே இப்போதைய நிலை என்றே சொல்லப்படுகிறது. இது அதிமுகவில் இருக்கும், சசிகலா ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.