பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி பேர்வழிகள்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

பத்திரிகையாளர்கள் என்ற பொறுப்பை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில பத்திரிகை சங்கங்களைப் போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதால், பத்திரிகைத் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் தொடர்பான வழக்கு ஒன்றில், சிபிசிஐடி  விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.

அதில்,  மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும், காதர் பாஷாவுக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என்றும் கேள்வி எழுப்பினர்.

பத்திரிகையாளர் என்ற பொறுப்பை மோசடிப் பேர்வழிகள் பலர் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  மஞ்சள் பத்திரிகை நடத்துபவர்களும் தங்களைப் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொள்வது வருத்தத்துக்குரியது என்றனர்.

மேலும், பத்திரிகைகளைப் பதிவு செய்ய, குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும். பத்திரிகைத் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பத்திரிகைகள் தற்போது செய்தி என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்வதாகவும், பத்திரிகை சங்கங்களைப் போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

போலிப் பத்திரிகையாளர்களால் நேர்மையாகப் பணியாற்றும் உண்மையான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.

உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும். தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? எனக் காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தகவல் தொலைத்தொடர்புத் துறை செயலாளர், பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தை தாமாக இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்டனர்.

வழக்குத் தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள அட்டை  எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிகை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் எத்தனை பத்திரிகைகள் உள்ளன, அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.