உதவி ஆய்வாளர் வில்சன் கொலை: குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால் தலைக்கு ரூ.5 லட்சம் சன்மானம்!

 காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால், தலைக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி களியக்காவிளை செக்போஸ்ட்டில், புதன்கிழமை இரவு  பணியில் இருந்த எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வில்சனின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு நடக்கும் முன் கொலையாளிகள் இருவரும் சாவகாசமாக நடந்து வருவதும், பின்னர் வில்சனை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஒடுவதும் பதிவாகியிருந்தது.

ஆனால் அவர்கள் கத்தியால் வில்சனை 6 இடங்களில் குத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மார்பு, வயிறு, தொடை ஆகிய 3 இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்தி குத்து காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதைப்போல் தொடை, கை, கால் உட்பட உடலில் 5 இடங்களில் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளது. நான்கு முறை சுட்டதில் 3 குண்டுகள் வில்சனின் உடலில் பாய்ந்துள்ளது.

ஐந்து மாதத்தில் ஓய்வுப்பெறப்போகும் சாதாரண உதவி ஆய்வாளர்   ஒருவரை இவ்வளவு கொடூரமாக கொல்லவேண்டிய நோக்கம் என்ன? என்பதே காவல் துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில், அபு சலீம் மற்றும் தவ்பிக் இருவர் உருவத்தோடும் ஒத்துப்போயுள்ளது. அந்த இருவரும் வில்சனை சுட்டுக்கொன்றதை போலீஸார் உறுதிப் படுத்தியுள்ளனர்.

விசாரணையில், ஒருவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானவர் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர், அவருடைய கூட்டாளி என்பதும் தெரிய வந்துள்ளது.

வில்சன் கொல்லப்படுவதற்கு முன் வாகனத்தை சோதனைச்சாவடி இருக்கும் கட்டிடத்தை ஒட்டிய பள்ளிவாசலின் மறுபுறம் நிறுத்திவிட்டு, சாவகாசமாக நடந்து வந்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர் என போலீஸார் கருதுகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வில்சனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் திருமணமான நிலையில் இளையமகள் மாற்றுத்திறனாளி மகள் என்பதால் மிகவும் மன உளைச்சலில் வில்சன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த மாதம் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாத விடுப்புக்குப்பின் கடந்தவாரம்தான் பணிக்கு திரும்பியுள்ளார் வில்சன்.

வில்சன் கொலை குற்றவாளிகள் குறித்து கேரள டிஜிபி ஆலோசனை நடத்தி குற்றவாளிகள் தலைக்கு ரூ.5 லட்சம் நிர்ணயித்து பிடித்துக்கொடுத்தால் ரூ.5 லட்சம் என சன்மானம் அறிவித்துள்ளார்.

ஒருபுறம் கேரள போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் தமிழக போலீஸாரும் குற்றவாளியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

வில்சனின் உடல் வியாழக்கிழமை மார்த்தாண்டத்தில் போலீஸ் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.