உள்ளாட்சி தேர்தலில் ஓரம்கட்டிய திமுக: விரக்தியை  வெளிப்படையாக அறிவித்த காங்கிரஸ்!

உள்ளாட்சி தேர்தலில் சொந்த கட்சியினரையும் திருப்திப்படுத்த முடியாது. கூட்டணி கட்சியினரையும் திருப்திபடுத்த முடியாது. இது அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானதே.

அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது திமுக. விரக்தியில் இருக்கிறது அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால், அந்தந்த மாவட்ட செயலாளர்கள், தொகுதி பங்கீட்டை பேசி முடிவு செய்வார்கள் என்று திமுக  தலைமை ஒதுங்கிக் கொண்டது.

ஆனால், எந்த மாவட்டத்திலும் இந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடியவில்லை. அதனால், அப்போதே கூட்டணியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இதிலாவது, தங்களுக்கு ஓரளவு உரிய பங்கீடு கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால், திமுகவினர் அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுப்பது போல தெரியவில்லை.

இதனால், விரக்தி அடைந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளனர்.

303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை இரண்டு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியில் ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறும்போது, உள்ளாட்சியில் உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிப்படுத்தி உள்ளது.  காங்கிரஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர, இது மிரட்டல் அல்ல.

2021  சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.