தேய்ந்து கொண்டே வரும் தேமுதிக: வாக்கு வங்கியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

கேப்டன் விஜயகாந்த் என்பது சினிமாவில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் ஒரு தனித்தன்மையை வெளிப்படுத்திய பெயர்.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். பல நடிகர்களையும் அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.

சினிமாவின் அடுத்த கட்டமாக, அவர் அரசியலில் நுழைந்தபோதும், அவருக்கான செல்வாக்கை அவர் நிலை நிறுத்தினார்.

2006 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட, அவரது கட்சியான தேமுதிக,  8.45 சதவிகித வாக்குகளை பெற்று, தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்தியது. விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது, திராவிட கட்சிகளுக்கு மாற்று தேமுதிகதான் என்று அனைவரையும் பேச வைத்தது அக்கட்சி.

அடுத்து வந்த 2009 மக்களவை தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு   10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, தன்னுடைய வளர்ச்சியை உறுதிப்படுத்தியது.

அடுத்து நடைபெற்ற 2011 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 41   தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக,    29  தொகுதிகளில் வெற்றி பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்த், எதிர்கட்சி தலைவர் ஆனார்.

அதுவரை வளர்ச்சி பாதையிலேயே பயணித்து வந்த தேமுதிகவுக்கு, அதன் பின்னர்தான் வீழ்ச்சி ஆரம்பித்தது.

சட்டமன்றத்தில், ஒரு கட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் – விஜயகாந்துக்கும் இடையே நேரடியாக மோதல் தொடங்கியது. அதற்கு பின்னர் நடந்த சம்பவங்களால், அவர் சட்டமன்றம் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்தார்.

தேமுதிகவில் உள்ள சில எம்.எல்.ஏ க்கள், ஒவ்வொருவராக அதிமுகவின் விசுவாசிகளாக மாற ஆரம்பித்தனர்.

கட்சி எம்.எல்.ஏ க்களை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவருக்கு எதிராக திரும்பிய அவர் கட்சி எம்.எல்.ஏ க்களே பொதுவெளியில், அவரையே விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

அவர், எதிர் கட்சி தலைவர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும், அரசுக்கு எதிரான பல போராட்டங்களை அவர் முன்னெடுக்கவில்லை. அவருடைய உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பது ஒரு காரணம்.

மேலும், அவரை சுற்றி இருந்த அவரது விசுவாசிகள், நண்பர்கள் பலரும் அவரை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு ஆளாகினர். அதற்கு ஆளும் கட்சி ஒரு காரணம் என்றாலும், குடும்ப ஆதிக்கமும்  முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னர், 2014 மக்களவை தேர்தலில், பாஜக, தேமுதிக, பாமக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. இந்த தேர்தலில், அன்புமணி, பொன்னார் மட்டுமே வெற்றி பெற்றனர். தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனாலும், அவருக்கு 2016 சட்டமன்ற தேர்தலிலும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார் என்கின்றனர் சிலர்.

2016  சட்டமன்ற தேர்தலில், தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ் கட்சியும் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

மறுபக்கம், பாஜக தேசிய தலைவர்கள் பலரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து, கூட்டணிக்கு வற்புறுத்தினர்.

ஆனால், அவரோ, மக்கள் நல கூட்டணியின் பக்கம் திரும்பினார். மக்கள் நல கூட்டணியை, அந்த தேர்தலில், மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த கூட்டணியை சேர்ந்த எந்த கட்சியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தே தோல்வியை தழுவினார்.

இந்த தேர்தலில் மட்டும், அவர் திமுக கூட்டணியில் இணைந்து பயணித்து இருந்தால், திமுக மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கும். விஜயகாந்த் மீண்டும் எதிர்கட்சி தலைவர் ஆகி இருப்பார்.

மக்கள் நல கூட்டணி, அந்த வாய்ப்பையும் தட்டி பறித்தது. தேமுதிக வாக்கு வங்கி கடுமையான சரிவை சந்தித்தது.

அடுத்து 2019 மக்களவை தேர்தலில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும், அந்த கூட்டணியில், ஒபிஎஸ் மகனை தவிர ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. 38 இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி  வாகை சூடியது.

இவ்வாறு 2011 ம் ஆண்டுக்கு பிறகு தொடந்து சரிவை சந்தித்து வரும் தேமுதிக, அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும், மாவட்ட ஊராட்சி கவுன்சில், ஒன்றிய கவுன்சில் ஆகியவற்றிலும் அக்கட்சிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி இல்லை.

தற்போது, தேமுதிகவுக்கு 3 மாவட்ட கவுன்சிலர்களும்,  96 ஒன்றிய கவுன்சிலர்களும் கிடைத்துள்ளனர்.

ஆனால் 2011 உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக  5 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களையும்,  339  ஒன்றிய கவுன்சிலர்களையும் பெற்றது.

விஜயகாந்தின் தேமுதிக, தனித்து நின்று முதன் முதலில் சந்தித்த  சட்டமன்ற தேர்தலிலேயே 8 சதவிகிதம் வாக்குகளை பெற்று தமது செல்வாக்கை நிரூபித்தது. அடுத்த மக்களவை தேர்தலில் 10 சதவிகித வாக்குகளை பெற்று மற்ற கட்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், அதன் செல்வாக்கு மெள்ள மெள்ள சரிந்து, இன்று  3 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியுடன் தடுமாறிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், மீண்டும் தேமுதிக தமது பழைய செல்வாக்கையும், வாக்கு வங்கியையும் மீட்டெடுக்க என்னென்ன முயற்சிகளில் ஈடுபடப்போகிறது என்பது அக்கட்சியின் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும்.