நாகை மாவட்டத்தில் பாஜகவுக்கு அஸ்திவாரம் போட்ட வேதரத்தினம்!

அரசியல் கட்சிகளின் செல்வாக்கையும் மீறி, தமது நல்ல செயல்பாடுகளால் தொகுதி மக்களின் நம்பிக்கையை பெற்று, செல்வாக்காக வலம் வந்து கொண்டிருக்கும் பலர், இன்றும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

மக்கள் செல்வாக்கு மிக்க எம்ஜிஆர், 1980 ம் ஆண்டு தேர்தலில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டார்.

அந்த தொகுதியில், அதிமுக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருந்தவர் செம்மலை. அவரது செயல்பாட்டால் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார்.

அந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அமைதியாக இருந்தார் செம்மலை. ஆனால், தொகுதி மக்கள் தொடர்ந்து வற்புறுத்திய காரணத்தால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனாலும், எம்ஜிஆர் மனது புண்படக்கூடாது என்று நினைத்து, வெற்றி பெற்ற உடனேயே மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

அதேபோல், எந்த கட்சியில் இருந்தாலும், திருநாவுக்கரசர், தாமரைக்கனி, சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட சிலர், கட்சிக்கு அப்பாற்பட்டு தொகுதி மக்களிடம் தொடர்ந்து தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில், வேதாராண்யம் தொகுதியில், 1996, 2001, 2006 ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை, திமுக சார்பில் வெற்றி பெற்றவர் எஸ்.கே.வேதரத்தினம்.

திமுகவின் செல்வாக்கை கடந்து, சொந்த செல்வாக்கை வளர்த்துக்கொண்ட வேதரத்தினத்தின் வளர்ச்சியை பிடிக்காத, மாவட்ட பொறுப்பாளர்கள் சிலர் செய்த உள்ளடி வேலைகளால், அவர் திமுகவில் இருந்து வெளியேறினார்.

அதையடுத்து 2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு  45 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தார்.

பின்னர், பாஜகவில் இணைந்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தாலும், திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு நிகரான வாக்குகளை பெற்றிருந்தார்.

இந்நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாகை மாவட்டத்தில் 16 இடங்களில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பாஜக போட்டியிட்டதில்,  8 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர, வேறு எங்கும் கால் பதிக்க முடியாத நிலையில் இருந்த பாஜகவை, நாகை மாவட்டத்தில் எட்டு இடங்களில் வெற்றி பெற வைத்த பெருமை, வேதரத்தினத்தையே சாரும் என்பதில் சந்தேகம் இல்லை.

எந்தவித கெட்ட பெயரும் இல்லாமல் திமுகவில், தொடர்ச்சியாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருந்த வேதரத்தினத்தை, அக்கட்சியில் இருந்து ஒதுக்க நினைத்தவர்கள், இன்று ஓரம் கட்டப்பட்டு விட்டனர்.

ஆனாலும், கடந்த இரண்டு முறையாக, வேதரத்தினம் இல்லாமல், வேதாரண்யத்தை திமுகவும் இழந்துதானே நிற்கிறது.

இதன் காரணமாகவே, திமுக வெற்றி பெற வேண்டிய இடங்கள் எல்லாம் இன்று பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

நாகை மாவட்ட திமுக செயலாளராக, வேதரத்தினம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, பின்னப்பட்ட சதிவலை, இன்று திமுகவுக்கு எதிராக மாறிவிட்டது. திமுக அன்று விதைத்த வினையை இன்று அறுவடை செய்து வருகிறது