உள்ளாட்சி வைரத்தை ஓரம் கட்டிய ஓடந்துறை!

சமூக ஊடகங்களால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு பஞ்சாயத்து என்றால், அது கோவை மாவட்டம், காரமடை அருகில் இருக்கும் ஓடந்துறை பஞ்சாயத்துதான்.

இருபது வருடங்களுக்கும் மேலாக, சண்முகம் அவரது மனைவி லிங்கம்மாள் ஆகிய இருவரும், அந்த உள்ளாட்சி அமைப்பில் ஆற்றிய பணிகள், நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கியது.

அப்படிப்பட்ட ஒரு பஞ்சாயத்து தலைவரை தோற்கடித்து, இன்றும் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர், அந்த பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள்.

இது நல்ல நோக்கத்துடன், பொது வாழ்க்கைக்கு வரும், சுயநலம் இல்லாத மனிதர்களை உதாசீனப்படுத்தும் முண்னுதாராணமாக அமைந்து விட்டதுதான் சோகம்.

லிங்கம்மாள், அவரது கணவர் சண்முகம் ஆகிய இருவருமே, கடந்த இருபது வருடங்களாக, ஓடந்துறை பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு வகித்தவர்கள்.

இவர்களுடைய பதவிக்காலத்தில், காற்றாலை அமைத்து, ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மக்களின் தேவைக்கு போக எஞ்சிய மின்சாரம், தமிழக அரசின் மின்சார வர்ரியத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஓடந்துறை என்பது குடிசைகள் இல்லாத பஞ்சாயத்து என்ற அடையாளத்துடன், 850 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக, ராஜீவ் தேசிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது இந்த பஞ்சாயத்தில்தான்.

இதன் காரணமாக, பஞ்சாயத்து தலைவராக இருந்த சண்முகத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன.

இப்படி பல்வேறு பெருமைகளை தங்கள் உள்ளாட்சி அமைப்புக்கு பெற்று தந்த சண்முகத்தை, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், 57 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

சண்முகம் அதிமுகவை சேர்ந்தவர், அவரை எதிர்த்து தற்போது வெற்றி பெற்ற அவரது உறவினர் தங்கவேல் திமுகவை சேர்ந்தவர்.

மக்கள் விரும்புபவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால், உலக அளவில் ஊருக்கே பெருமை சேர்த்த ஒரு நல்ல மனிதரை தோல்வி அடைய செய்யலாமா?

அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அரசியல்வாதியாக இல்லாதவரை, பொதுசேவையில் புகழ் பெற்றவரை தோற்கடிப்பது யாருக்கு நஷ்டம்?

இதுகுறித்து, விகடன் குழுமத்திற்கு, சண்முகம் அளித்த பேட்டி, அந்த பஞ்சாயத்தோடு தொடர்பே இல்லாத, பல்வேறு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பணத்திற்கு முன்னாள், நல்ல மனிதர்களை புறம் தள்ளும் மனிதர்களுக்கு, சேவை செய்த சண்முகத்தின் தோல்வி, அவருக்கான தோல்வி அல்ல. சிறந்த மக்கள் சேவகருக்கான தோல்வி, ஜனநாயகத்திற்கான தோல்வி என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி நூறு சதவிகிதம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை வெற்றி பெற்றிருந்தால், பட்டியல் இன மக்களில், ஒரு சிலருக்கு விடுபட்டுள்ள பசுமை வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு இருக்கும்.

கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குமும்பமும், தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாமே தயாரித்துக் கொள்ளும் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும்.

அவற்றை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்று வருத்தப்படுகிறார் சண்முகம். மக்களுக்காக இவர் வருத்தப்படுகிறார். மக்கள் இவருக்காக வருத்தப்படவில்லை என்பதுதான் வருத்தமே.

இவரைப்போலவே, உள்ளாட்சியில் நல்லாட்சி வழங்கி பாராட்டையும், விருதையும் பெற்ற இன்னும் சிலர், மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். சிலர் போட்டியிடாமலே ஒதுங்கி விட்டனர்.

1996 முதல்  2006 வரை கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரமன்ற தலைவராக இருந்த பஞ்சவர்ணம் என்பவர், நூறு சதவிகிதம், வெளிப்படையான நிர்வாகத்தை கொடுத்து ஊடகங்களின் பாராட்டையும், பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றவர். அதற்கு பின்னர் அவர் தேர்தலில் போட்டி இடவே இல்லை.

2011 முதல்  2016 வரை நாகை மாவட்டம் பாகசாலை, ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கே.கிருஷ்ணன் என்பவர், தமிழகத்திலே முதன்முறையாக, நூறு சதவிகிதம் சூரிய ஒளி மின்சாரத்தை கொண்டு வந்து, மின்வெட்டே இல்லாத பஞ்சாயத்தாக, பாகசாலையை  மாற்றியவர்.

இவரையும் ஊடகங்கள் பாராட்டின. பல்வேறு விருதுகளையும் பெற்றார். இவரும் தற்போது பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

எத்தனையோ சண்முகங்கள், பஞ்சவர்ணங்கள், கிருஷ்ணன்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அது மக்களுக்குதான் நஷ்டமே தவிர அவர்களுக்கு அல்ல.