1000 ஒட்டகங்களைக் கொல்ல ஆஸ்திரேலியா முடிவு!

விலங்குகள் நல தன்னார்வ அமைப்புகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி இருக்கின்றன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட,  விலங்குகள் நல அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், ஆஸ்திரேலியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, அங்குள்ள ஆயிரம் ஒட்டகங்களை கொல்வதற்கு, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தென் பகுதியில் உள்ள ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீரைக் குடிப்பதால், அவற்றைக் கொல்ல அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐந்து  நாட்களுக்குள் 1000 ஒட்டகங்களைக் கொல்ல வேண்டும் என  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இன்று முதல் அந்தப் பணி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒட்டகங்களைக் கொல்வதற்காக, ஆஸ்திரேலிய அரசு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஒட்டகங்களைக் கொல்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், அந்தப்பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

சுமார் 480 மில்லியன் விலங்குகள், ஆஸ்திரேலிய காட்டுத் தீக்குப் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.