முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித வாக்குப்பதிவு: ஓரிரு இடங்களில் லேசான பரபரப்பு!

தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் வாக்குப் பெட்டிகளை சிலர் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றபடி தேர்தல் நடந்த அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27  மாவட்டங்களில் உள்ள 156  ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

சில இடங்களில் வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர், சின்னம் இடம்பெறவில்லை என புகார் எழுந்ததையடுத்து, அந்த இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

இத்தேர்தலில் 4 பதவிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடந்ததால் 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப் பட்டன.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

பதற்றமானவை என அடையாளம் காணப்பட்ட 1,709 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, இணையதளம் மூலமாக வாக்குப்பதிவு கண் காணிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 114 வாக்குச் சாவடிகளிலும் முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டன. ஒவ்வொரு வாக்காளரும் 4 இயந்திரங்களில் தலா ஒரு வாக்கை பதிவு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் திடீரென 50-க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து, அங்கிருந்த ஆவணங்கள், இருக்கைகளை சூறையாடினர்.

பின்னர் வாக்குப் பெட்டியை வெளியில் தூக்கிவந்து, பதிவான வாக்கு களை தீ வைத்து எரித்தனர். இச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல, திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஏற்கெனவே குறிப்பிட்ட சின்னத்தில் வாக்களிக் கப்பட்ட வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பெரிய முள்ளிப்பட்டியில், பின் வாசல் வழியாக வந்த சிலர், வாக்குப் பெட்டிகளை தூக்கிச் சென்றனர். சிறிது நேரத்தில் வாக்குப் பெட்டிகளை போலீஸார் மீட்டனர்.

இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

நேற்று நடைபெற்ற முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித  வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எஞ்சியுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ம் கட்டமாக வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இரண்டாம்  கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், 27 மாவட்டங்களில் 315 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.