உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க வேண்டுமென, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இரண்டு கட்டங்களில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளும் அருகிலுள்ள அரசு அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளன. ஜனவரி 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

எனினும், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நிறுத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், “ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

முதலில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 30 ம தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.