தமிழக உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது!

உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதில் முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும். வாக்காளர் தவிர, எந்தவொரு நபரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைதல் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் 30-ந்தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற இருக்கிறது.