பாகிஸ்தான் வெட்டுக்கிளிகளால் இந்திய பயிர்கள் நாசம்: நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு கடிதம்!

 கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் ஒரு ஊருக்குள் புகுந்தால், அந்த ஊரில் உள்ள அனைத்து பயிர்களையும் நாசம் செய்து விடும்.

அப்படி ஒரு நிலை ,பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக  குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில், வெட்டுக்கிளி படையெடுப்பால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் 11 குழுக்கள் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக பறந்து வந்து பயிர்களை நாசப்படுத்துவது வழக்கம்.

இந்த வெட்டுக் கிளிகள் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைகின்றன.

அவை நாளொன்றுக்கு 150 முதல் 200 கிலோ மீட்டர் வரை பறந்து செல்லக்கூடியவை. தற்போது பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை சூறையாடி வருகின்றன.

இந்நிலையில்,  வெட்டுக்கிளி படையெடுப்பினால் பயிர்கள் நாசமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், வெட்டுக்கிளி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து  தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 20 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலமும், குஜராத்தில் மட்டும் ஆயித்து 800 ஹெக்டேர் விளைநிலங்களும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.