கட்சிகள் வாரியாக தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி உள்ளது?

மக்களவையை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருந்த தேர்வாகியுள்ள 39 எம்.பிக்களில் 7 கட்சிகள் வாரியாக செயல்திறன் விவரம் வெளியாகியுள்ளது.

மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து தொகுத்துள்ள பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் கட்சிகள் வாரியாகவும், அகில இந்திய அளவிலும் எம்.பி.க்களின் செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளது.

பிஆர்எஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிபடையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி17-வது மக்களவையை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருந்த தேர்வாகியுள்ள 39 எம்.பிக்கள்7 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த எம்.பி.க்களின் சராசரி செயல் திறன், கட்சிகள் அடிப்படையில் எப்படி அமைந்துள்ளது என பார்க்கலாம்.

திமுக, மொத்த மக்களவை எம்.பி.க்கள் 24 பேர்: சராசரி 38.4. காங்கிரஸ் மொத்த மக்களவை எம்.பி.க்கள் 8 பேர்: சராசரி 51. சிபிஐ, மொத்த மக்களவை எம்.பி.க்கள் 2 பேர்: சராசரி 71.5. சிபிஎம், மொத்த மக்களவை எம்.பிக்கள் 2 பேர்: சராசரி 57.5. அதிமுக, மொத்த மக்களவை எம்.பி.க்கள் ஒருவர்: சராசரி 78. விசிக  எம்.பி. ஒருவர்: சராசரி 44. முஸ்லிம் லீக் எம்.பி ஒருவர்: சராசரி 64.

தமிழக மக்களவை எம்.பி.க்களின் மொத்த சராசரி செயல்திறன் 45.5 ஆக உள்ளது. தேசிய அளவில் இந்த சராசரி 42.7 என்ற அளவில் உள்ளது. அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களை மகாராஷ்டரா மற்றும் கேரள மாநிலங்கள் பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா மக்களவை எம்.பி.க்களின் சராசரி செயல்திறன் 80.1 ஆகவும், கேரளா எம்.பி.க்களின் சராசரி செயல்திறன் 71.1 ஆகவும்  உள்ளது.

கட்சிகளின்படி கணக்கிட்டால் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் முதலிடம் பிடித்தள்ளனர். மக்களவையில் அக்கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அவர்களின் செயல்திறன் சராசரி 104.5 புள்ளிகளாக உள்ளது.

தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்த தமிழக எம்.பி.க்கள் யார் யார்?

தனிநபர் மசோதாக்களை பொறுத்தவரையில் இந்த மக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் வரை மொத்தம் 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உறுப்பினர்கள் முக்கியமான பிரச்சினைகளில் தனி நபர் மசோதா கொண்டு வரலாம்.

17- வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் சேர்த்து 146 தனிநபர் மசோதாக்கள் அகில இந்திய அளவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திலிருந்து 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக எம்.பி.க்களில் வசந்தகுமார், கனிமொழி,  நவாஸ்கனி ஆகியோர் தலா 2 தனிநர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், திமுக எம்.பி.யுமான ரவிக்குமார் ஒரு மசோதா தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவையும், மரண தண்டனை ரத்து செய்யக்கோரும் மசோதாவையும் தனிநபர் மசோதாக்களாக கொண்டு வந்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மீனவர்கள் நல மசோதாவையும்,  தொடக்க,  நடுநிலை,  உயர்நிலை,  மேனிலை மற்றும் தொழில்நுட்ப கல்வியை கட்டாயமாகவும்,  இலவசமாகவும் வழங்ககோரும் மசோதவையும் தாக்கல் செய்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. நவாஸ் கனி, தேசிய விவசாயம் மற்றும் விவசாயிகள் ஆணைய மசோதாவையும், மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகளை தேசியமயமாக்கும் மசோதாவையும் தாக்கல் செய்துள்ளார்.

விழுப்புரம் தொகுதி திமுக எம்.பி. ரவிக்குமார் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.