தமிழக மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடு: வசந்தகுமாருக்கு முதலிடம்!

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் செயல்பாட்டில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார்  முதலிடம் பிடித்துள்ளார்.

பிரைம் பாய்ன்ட் பவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் கடந்த பத்து ஆண்டுகளாக, இந்திய அளவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி, 17-வது மக்களவை அமைக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடர் வரை தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்ற விவரத்தை அந்த அமைப்புகள் தொகுத்துள்ளன.

மக்களவை உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்பது, தனி நபர் மசோதா தாக்கல் செய்வது, முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்புவது ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது பணி மதிப்பிடப்படுகிறது.

அதன்படி, விவாதங்கள்,  தனி நபர் மசோதா,  கேள்விகள் ஆகியவற்றின் அடிப்படையில், தமிழக எம்.பி.க்களில், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் 109 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார்.

இவர் 28 விவாதங்கள், 2 தனியார் மசோதாக்கள் மற்றும் 79 கேள்விகள் கேட்டு, முதலிடம் வகிக்கிறார். 95  சதவிகித கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

எம்.பி. வசந்தகுமார் கடந்த முதல் கூட்டத்தொடரில் மொத்த மக்களவையிலும் 27ம் இடத்தை பெற்று இருந்தார். தற்போது, 2 இடங்கள் முன்னேறி 25ம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ், தமிழக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இவர் 28 விவாதங்களில் பங்கேற்று 55 கேள்விகள் எழுப்பியும் 84 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். 79  சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தும், காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.பி. செல்வமும் தலா 78 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.