திரைச்சுவை: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர்!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற சிறப்புக்கு உரியவர்  மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர்.

எம்.கே.டி என்ற மூன்றெழுத்தில் பிரபலமாக அழைக்கப்பட்ட இவரைப்போல், வாழ்ந்தவரும் இல்லை வீழ்ந்தவரும் இல்லை என்கிறது தமிழ் சினிமாவின் கதை.

1910 ம்  ஆண்டு மார்ச் மாதம் 1 ம் தேதி தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயவரத்தில், கிருஷ்ணசாமி – மாணிக்கம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் எம்.கே.டி.

மாயவரத்தில் பொற்கொல்லர் தொழிலில் ஈடுபட்டிருந்த இவரது குடும்பம், பின்னர் தொழில் நிமித்தமாக திருச்சிக்கு குடியேறுகிறது.

சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. இசைக் கச்சேரி எங்கு நடந்தாலும், அங்கு பாடும் பாடல்களை அப்படியே பாடிக்காட்டுவது அவருக்கு வழக்கமாக இருந்தது.

அப்போது, எப். ஜி. நடேச அய்யரின், திருச்சி இரசிக இரஞ்சனா சபாவில் நடந்து வந்த அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதை பார்த்து வியந்த வித்வான் பொண்ணு ஐயங்கார் அவருக்கு கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொடுக்க, நாடக ஆசான் நடராஜ வாத்தியார் நடிப்பு பயிற்சியை வழங்கினார்.

நடிப்பிலும், இசையிலும் சிறந்து விளங்கிய தியாகராஜனுக்கு புதுக்கோட்டை திவான் பகதூா் ராஜா தட்சிணாமூா்த்தி பிள்ளை பாகவதா் பட்டத்தை வழங்கினார். அன்று முதல் அவர் தியாகராஜா பாகவதர் ஆனார்.

1926 ல் திருச்சி  பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி    நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.

1934 ல் பவளக்கொடி நாடகம், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில்  திரைப்படமானது. அதில் இடம்பெற்ற 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார்.

இப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும், வரலாறு காணாத அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், இப்படம் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து ஓடியது.

அதன்பிறகு பாகவதர் நடிப்பில்,

நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ்  ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றிப்படங்களாக வெளிவந்தன.

1944  ல் வெளியான ஹரிதாஸ் என்ற படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சென்னை பிராட்வே தியேட்டரில் இந்த படம் மூன்று தீபாவளிகளை கடந்து ஓடியது.

பாகவதர் நடித்தது மொத்தம் பதினைந்து படங்கள், அதில் ஆறு படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

அன்றைய மதராஸ் மாகாணத்தில், மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், தியாகராஜா பாகவதருக்கும், அவரது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை காலத்திலேயே, வழக்கு மறு விசாரணைக்கு எடுக்கப்பட்டு இருவரும் குற்றமற்றவர்கள் என்று 1944 ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

சிறையிலிருந்து வெளிவந்ததும், இராஜமுக்தி, அமரகவி, சியாமளா, புதுவாழ்வு, சிவகாமி ஆகிய படங்களில் பாகவதர் நடித்தார்.

அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன. எனினும், எந்த படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. அதற்கு பின்னர், அவர் படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில், ஈரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாகவதர்  1959 ம் ஆண்டு நவம்பர்  1 ம் தேதி மரணம் அடைந்தார்.

பாகவதர் காலத்தில் மக்கள் முனுமுமுத்தது எல்லாமே அவரது பாடல்களை. பின்பற்றியது எல்லாமே பாகவதர் ஸ்டைலை. அந்த பீரியடே.. பாகவதர் பீரியட் என்று மாறிபோய் இருந்தது.

பன்னீரில் குளித்தார், தங்க தட்டில் சாப்பிட்டார், பட்டு மெத்தையில் குளித்தார். அவருக்கு ஆண்களை விட பெண் ரசிகர்கள் ஏராளமாக இருந்தனர் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.

ஆனால், அவரது கடைசி காலத்தில் அவர் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியே மரணத்தை தழுவி இருக்கிறார்.

தீன கருணாகரனே நடராஜா, கிருஷ்ணா முகுந்தா முராரே, சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமணிய சாமி உன்னை மறந்தேன், மன்மத லீலையை வென்றார் உண்டோ போன்ற எண்ணற்ற பாடல்கள் இன்னும் அவரது இசைத்திறனை பறைசாற்றுகின்றன.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த தியாகராஜ பாகவதரை போல வாழ்ந்தவரும் இல்லை. வீழ்ந்தவரும் இல்லை என்பதே உண்மை.