அச்சுறுத்தும் 50 ஆயிரம் கோடி சொத்து வழக்கு: சசிகலா சிறையில் இருந்து  மீண்டு வருவாரா?

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களுருவில்  சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தண்டனை காலம் முடிந்து வருவாரா? அதற்கு முன்பு வருவாரா? என்று ஒரு தரப்பினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில், செல்லாத 1000,  500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, 50 ஆயிரம் கோடி  மதிப்புள்ள சொத்துக்களை அவர், பினாமி பெயர்களில் வாங்கியுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் உயர்நீதி மன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இதனால், சசிகலா சிறையில் இருந்து வருவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சசிகலா தரப்பினரை பொறுத்தவரை, இந்த வழக்கு நிற்காது என்று கூறுகினார். ஆனால், நிலைமை அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை.

சசிகலா பரோலில் வந்து சென்னையில் தங்கி இருந்தபோது, பணமதிப்பிழப்பு காலத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களை எரித்து விடுமாறு கூறியதையடுத்து, அவை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், எரிப்பதற்கு முன்னாள், யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று, அந்த ஆவணங்களை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த செல்போன் தகவல்கள், வருமானவரித் துறையினரால் கைப்படப்பட்டு, அதன்    அடிப்படையில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக பொங்கிய எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்றோரை, சசிகலா விடுதலைக்கு பின்னர் ஒரு கை பார்க்கலாம் என்று எண்ணியிருந்த, அவரது ஆதரவாளர்கள் தற்போது கப் சிப் ஆகிவிட்டனர்.

மேலும், ஆளும் தரப்பில் இருப்பவர்கள், மத்திய அரசின் செல்வாக்கை பயன்படுத்தி, சசிகலாவை வெளியில் வரமுடியாத அளவுக்கு, வழக்கு மேல் வழக்கு போட்டு உள்ளேயே வைத்திருக்கும் நோக்கில் காய் நகர்த்தி வருகிறார்கள் என்றும் ஒரு பேச்சு உள்ளது.

இது தவிர, ஜெயலலிதா இறந்த பின்னர், பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து அகற்றி, அந்த பதவியில், தாம் அமர்வதற்கு சசிகலா மேற்கொண்ட முயற்சிகள், கூவத்தூரில் எம்எல்ஏ க்களை பத்திரப்படுத்தி, பாஜகவின் முயற்சியை தவிடுபொடி ஆக்கியது போன்றவற்றை இன்னும் பாஜக மறக்கவில்லை.

அதனால், மேலும், மேலும் வழக்குகளை தொடுத்து சசிகலா வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறைக்குள்ளேயே வைக்கவேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் அதிமுக தரப்பிலேயே சிலர் கூறுகின்றனர்.

எனவே, சசிகலா தண்டனை காலம் முடிந்தாலும், மற்ற சில வழக்குகளின் அடிப்படையில், சிறையில் இருந்து  அவ்வளவு எளிதாக வெளியில் வர முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

அதனால், சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் வரை எதையும் உறுதியாக கூற முடியாத நிலையே இதுவரை நீடிக்கிறது.