கதிர்வேலன் காதல்… கதை சுருக்கம்!

-ப.ராஜேந்திரன்

கதிர்வேலன் டிப்ளமோ படித்த சிவில் என்ஜினியர். தஞ்சாவூரில் வசிக்கும் இவனுடைய வம்சத்தை சேர்ந்தவர்கள், சோழ அரசர்களின் கோவில் மற்றும் கட்டிடம் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டவர்கள். தந்தை சுதை வேலையில் கெட்டிக்காரராய் இருந்து மறைந்து விட்டார்.

தந்தை இறப்புக்குப்பின் வறுமையில் வாடியது குடும்பம். தாய், சித்தாள் வேலை பார்த்து பையனை மிகவும் சிரமப்பட்டு சிவில் டிப்ளமோ படிக்க வைத்தார்.

படிப்பு முடித்த கதிர்வேலனுக்கு, ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அரசின் குடியிருப்புகள் மற்றும் குடிசைமாற்று வாரிய வீடுகளை, ஒப்பந்தத்தின் கட்டிக்கொடுக்கும்  நிறுவனம் அது.

கதிர்வேலன் வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில், கோயம்புத்தூரில் அம்மன் குளம் என்ற ஊரில், குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டது அந்த நிறுவனம்.

அதில், கடைநிலை  சூப்பர்வைசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான் கதிர்வேலன். பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு, முதல்வர் வருவதாக அறிவிப்பும் வெளியாகி விட்டது.

அந்த நேரத்தில், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களில் சில, ஒரு பக்கமாக சாய ஆரம்பித்து விட்டன. இதைக்கண்டு, அதிகாரிகளும், கட்டுமான நிறுவனமும் அச்சமடைய ஆரம்பித்து விட்டனர்.

கட்டிடம் ஒழுங்காக கட்டாமல் முறைகேடு நடந்து விட்டதாக பொது மக்களும், ஊடகங்களும் குற்றம் சாட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது அதிகாரிகளின் அச்சம்.

கட்டிடம் முறையாக கட்டி முடிக்கவில்லை என்று சொல்லி, பல கோடி ரூபாய் பணத்தை அரசு வழங்காமல் போய்விட்டால், பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று கதிர்வேலன் பணி செய்யும் தனியார் நிறுவனம் தவிப்பில் உள்ளது.

இந்த நிலையில், வேறு வழியின்றி அவசர அவசரமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் முன்னணி ஆர்க்கிடெக்ட் பலரும் வந்து, அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பல முயற்சிகள் செய்தும் அது முடியாமல் போகிறது. பதினைத்து மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டி, காலங்கள் போட்டு முறைப்படிதான் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், கற்பாறைகள் நிறைந்த அந்த இடத்தில், பதினாறு மீட்டர் ஆழத்தில், பழங்காலத்தில் இருந்த பிரம்மாண்டமான மரத்தின் வேர் ஒன்று இருக்கிறது.

அந்த வேர் கான்கிரீட் மற்றும் கட்டிடத்தின் எடையை தாங்க முடியாமல் உள்வாங்கியதால்தான், கட்டிடம் சாய்ந்தது என்று கண்டு பிடிக்கப்படுகிறது.

ஆனால், இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல்தான் அனைத்து ஆர்க்கிடேக்ட்களும் தடுமாறி வருகின்றனர்.

அப்போதுதான், டிப்ளமோ படித்த கடைநிலை பொறியாளரான கதிர்வேலன், இதை தம்மால் சரி செய்ய முடியும் என்று கூறுகிறான்.

உலகப்புகழ் பெற்ற பொறியாளர்களால் கூட சரி செய்ய முடியாத இந்த பிரச்சினையை, சாதாரண டிப்ளமோ படித்த உன்னால் எப்படி சரி செய்ய முடியும் என்று அங்கிருக்கும் அனைவரும் கேலி செய்கின்றனர்.

அவனால், அந்த அவமானத்தை தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு அங்கு இருக்கும் அனைவரும் அவனை நையாண்டி செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில், இத்தாலியில் ஆர்க்கிடெக்ட் படித்து முடித்த, அந்த ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளி மகள், அவனிடம், சரி இதை எப்படி சரி செய்வது என்று கேட்கிறாள்.

அப்போது, தன்னுடைய வீட்டில் தம் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகள் பல உள்ளன. அதில், சோழ மன்னர்கள் காலத்தில், ஒரு பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்ட போது, அந்த கட்டிடம் சாய்ந்து விழும் நிலைக்கு போய்விட்டது. அதை எப்படி, தம் முன்னோர்கள் பாதிப்பு இல்லாமல் சரி செய்து மன்னரின் பாராட்டை பெற்றார்கள் என்று எழுதப்பட்டுள்ள விவரத்தை, சொல்கிறான்.

அதே பாணியில், இந்த கட்டிடத்தையும் சாயாமல் தூக்கி நிறுத்த முடியும் என்றும் ஐடியா சொல்கிறான்.

கதிவேலன் சொல்லும் ஐடியா, அவளுக்கு ஓரளவு சரியாக தோன்றுகிறது. அதன் படியே பணிகள் நடைபெறுகின்றன. மூன்றே நாட்களில் மீண்டும், கட்டிடம் பழைய நிலையிலேயே நிலை நிறுத்தப்படுகிறது.

எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வருகின்றன. நிறுவனம் எதிர்கொண்ட முக்கிய பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

அங்கு வந்த புகழ் பெற்ற ஆர்க்கிடேக்டுகள் அனைவரும் கதிர்வேலனை பாராட்டுகின்றனர். நிறுவனத்தில் கதிர்வேலன் புகழ் பரவுகிறது.

இதுவே, கதிர்வேலன் மீது, நிறுவன முதலாளியின் மகளுக்கு மீது காதல் உருவாக காரணம் ஆகிவிடுகிறது.

இந்த காதல், நிறுவன முதலாளி குடும்பத்திற்கு தெரிய வருகிறது. என்னதான் திறமை இருந்தாலும், ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு, அவளை மனம் முடித்து கொடுக்க விரும்பாமல், பிரித்து, அவளை மீண்டும் இத்தாலிக்கு மேல் படிப்பு படிக்க அனுப்பி வைத்து விடுகின்றனர்.

கதிர்வேலன் மீதும் ஒரு அபாண்ட பழி சுமத்தி, வேலையை விட்டு தூக்கி விடுகின்றனர்.

வேலையும் இல்லாமல், காதலியையும் பார்க்க முடியாமல் தவிக்கும் கதிர்வேலன், ஒரு கட்டத்தில், அவன் காதலி இத்தாலியில், இருப்பதை அறிந்து, தன்னுடைய வீட்டையும் கொஞ்சநஞ்ச  நிலத்தையும் விற்றுவிட்டு, சுற்றுலா விசாவில் காதலியை சந்திக்க இத்தாலி செல்கிறான்.

அங்கு, காதலியை தேடி தேடி அலுத்துப்போன கதிர்வேலன், உலக அதிசயங்களில் ஒன்றான, பைசா நகர சாய்ந்த கோபுரத்தை பார்க்க வருகிறான்.

அவன் வரும் நேரத்தில் அங்கு ஒரு லேசான நில நடுக்கம் ஏற்படுகிறது. மக்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடுகின்றனர்.

அதனால், பைசா நகர சாய்ந்த கோபுரம் மேலும் சாய்ந்து விடுகிறது. இப்படியே விட்டால், அந்த கோபுரம் மேலும் சாய்ந்து கீழே விழும் என்று முடிவுக்கு வரும், அந்நாட்டு அரசு அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுகிறது.

உலக அதிசயம் என்பதால், அதன் தோற்றம், அமைப்பு, பாரம்பரியம் என எதையும் மாற்றாமல், மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தால் தான் அதன் சிறப்பு நிலைக்கும்.

அதனால், உலகம் முழுக்க உள்ள முன்னணி ஆர்க்கிடெக்ட் நிறுவனங்கள் எல்லாம், அதற்கான ஆலோசனைகளை இத்தாலி அரசுக்கு அனுப்பி வைக்கின்றன. ஆனால், எதிலும் அந்த அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை.

அப்போது, இத்தாலிக்கு சென்றுள்ள கதிர்வேலன், தமது முன்னோர்களின் ஓலைச்சுவடியில் உள்ள சிலவற்றை ஆதாரமாகக்கொண்டு, அங்குள்ள நண்பர்கள் உதவியுடன், பைசா கோபுரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் ஒரு ஆலோசனையை அரசுக்கு அனுப்பி வைக்கிறான்.

அந்த ஆலோசனையை இத்தாலி அரசு ஏற்கிறது. அதன் மூலம், பைசா நகர சாய்ந்த கோபுரம், அதன் பாரம்பரியம் மாறாமல் மீண்டும் பழைய நிலையில் நிலைநிறுத்தப்படுகிறது.

இந்த செய்திகள், உலகம் முழுவதும் ஊடகங்களில் பரவி, கதிவேலன் புகழ் உலகமெலாம் எதிரொலிக்கிறது.

யாராலும் எளிதில் சந்திக்க முடியாத, போப் ஆண்டவர் கதிர்வேலனை அழைத்து பாராட்டி, ஆசி வழங்குகிறார்.

அப்போது, தன்னுடைய மகளை அவனிடம் கொண்டு வந்து ஒப்படைத்து, வாயடைத்து நிற்கின்றனர் அவனுடைய பழைய முதலாளியும் அவன் மனைவியும்.