ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29-ம் தேதி பதவியேற்பு!

 ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜேஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, ஹேமந்த் சோரன், வரும் 29-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார்.

ஜார்க்கண்டில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் கடந்த 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 81 இடங்களில் 79-ல் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவளித்தது. மற்றொரு தொகுதியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுதேஷ் மஹதோவுக்கு எதிராக பாஜக போட்டியிடவில்லை.

முன்னாள் முதல்வர் சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும்  லாலு பிரசாத் யாதவின்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 இடங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும், ஏஜேஎஸ்யு கட்சியும் தனித்துப் போட்டியிட்டன.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள் கிழமை  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், ஜேஎம்எம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதில் ஜேஎம்எம் 30, காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 1 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜேஎம்எம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவரும் சிபு சோரனின் மகனுமான ஹேமந்த் சோரன் 2-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். இவர் இதற்கு முன்பு கடந்த 2013 ஜூலை முதல் 2014 டிசம்பர் வரை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.

சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன், ஜேஎம்எம் சார்பில் தும்கா மற்றும் பார்ஹெட் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இவை இரண்டிலும் வெற்றி பெற்றார்..

இந்நிலையில், செவ்வாய் கிழமை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்முவை, ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் சந்தித்தார்.

அப்போது தனக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து வரும் 29-ம் தேதி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்க உள்ளார.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக அல்லாத பிற மாநில முதல்வர்களுக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.