சரியும் செல்வாக்கு: மாநில அரசியல் அணுகு முறையில் மாற்றத்தை எதிர்நோக்கும் பாஜக!

மக்களவை தேர்தலில், இந்த ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் 80 சதவிகித தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளது.

தனித்து போட்டியிட்ட பாஜக 33 சதவிகித வாக்குகளுக்கும் மேல் பெற்றும் ஆட்சியை இழந்திருக்கிறது. முதல்வரே தோற்றுப்போய் இருக்கிறார்.

ஆனால், அதைவிட ஒரு சதவிகிதம் குறைவாக வாக்குகளை பெற்றுள்ள, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜக வெற்றி பெற்றால், அது மோடி அலை என்றும், தோல்வியை தழுவினால், மாநில தலைமையின் மீது பழி போடுவதும் ஒரு வழக்கமாக உள்ளது.

ஆனாலும், ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, பாஜக தோல்விக்கு முதல்வர் ரகுபர் தாசே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அதே சமயம், களநிலவரத்தை சரியாக ஆராயாமல், ரகுபர்தாசை மீண்டும் முதல்வராக முன்னிறுத்தியது அமித்ஷாவின் தவறு என்றும் கூற வேண்டியுள்ளது.

பொதுவாகவே, ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகளை முன்னிறுத்தாமல், பெரிய அளவில் சமூக பின்னணி இல்லாத நபர்களை முன்னிலைப் படுத்துவது  பாஜகவின் கொள்கையாக உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் மோதல் எழுந்தபோது, அதை சமாளிக்க முடியாமல் போனதற்கு, பட்நாவிசுக்கு மிகப்பெரிய சமூக பின்னணி இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.

மேலும், பெரும்பான்மை சமூகமான மராத்தி சமூகத்தவரையோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தையோ அங்கு முதல்வராக முன்னிறுத்தாததும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

ஹரியானாவிலும் பெரும்பான்மை சமூகமான ஜாட் இனத்தை புறக்கணித்ததன் விளைவாகவே, அதே சமூகத்தை சேர்ந்த துஷ்யந்த சவுதாலாவின் ஆதரவை கோர வேண்டிய நிலைக்கு பாஜக இறங்கி வரவேண்டிய நிலைக்கு ஆளானது.

ஜார்கண்டிலும், அடர்த்தியாக வாழும் பழங்குடி மக்களை பின்னுக்கு தள்ளி, மற்ற சமூகத்தின் வாக்குகளை கவர ரகுபர் தாசை முதல்வராக்கியதும், ஜார்கண்ட் மாணவர் அமைப்பின் கூட்டணியை புறக்கணித்து, தனித்து நின்றதும் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வந்து கையை அசைத்தாலே வாக்குகள் குவியும் என்ற கணக்கு, ஜார்கண்டில் எடுபடாமல் போய்விட்டது.

மேலும், மத்திய அரசின் சாதனைகளாக பாஜக முன்னிறுத்தும் திட்டங்களை, மாநில மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் ஜார்கண்ட் தேர்தல் உணர்த்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அது தேசிய கட்சியாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தல்களில், அந்தந்த மாநிலங்களின் பிரச்சனைகளை மையப்படுத்தியே பிரச்சாரத்தில் ஈடுபடுவதையும் இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தாலும், மாநில சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, தனித்து நின்றோ, கூட்டணியை சார்ந்தோ தனக்கு தேவையான பிரதிநிதித்துவத்தை பெற்று விடுவதற்கும் இதுவே முக்கிய காரணமாகும்.

பல இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பெரிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுக்காத போதும், பாஜகவுக்கு எதிரான வாக்குகள், காங்கிரசுக்கு சாதகமாக திரும்பி விடுவதையும் பார்க்க முடிகிறது.

எப்படி பார்த்தாலும், இனிவரும் காலங்களில் மாநிலங்களில், பாஜக  கால்பதிக்க மோடி அலையும், அமித்ஷாவின் கணக்குகளும் பலன் தராது என்பதற்கு இதுவே சான்றுகளாகும்.

எனவே, பாஜக மாநில விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதே, மாநில தேர்தல்கள் உணர்த்தும் உண்மை.