உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரம் பேர்  போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதுவரை 18 ஆயிரம் பதவிகளுக்காண பொறுப்பாளர்கள்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில், 3 ஆயிரத்து 643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 48 ஆயிரத்து 891 பேர் தங்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்

அதில் தற்போது 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கான நபர்கள்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 18 ஆயிரத்து 137 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கு 410 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 23 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.