பாஜகவுக்கு மாநிலங்களில் சரிந்து வரும் செல்வாக்கு! 5 மாநிலங்களில் ஆட்சி இழப்பு!

வடமாநிலங்களில் மட்டுமே பாஜகவுக்கு செல்வாக்கும், வலுவான வாக்கு வங்கியும் உள்ளது என்ற நிலையை மாற்றி, கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் கூட ஆட்சி அமைத்தது பாஜக.

ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பில் இருந்த மாநிலங்களில் அதன் செல்வாக்கு மிகவும் சரிந்து வருவதை அண்மைகாலமாக நடந்து வரும் சட்டமன்ற தேர்தல்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்நிலையில், இன்று தேர்தல் முடிவு வெளியாகி வரும் ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பை இழக்கிறது பாஜக. அங்கு காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது.

ஜார்கண்டுடன் சேர்த்து இதுவரை ஐந்து மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை இழந்துள்ளது பாஜக.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்ற போதும், சிவசேனாவுடன் கூட்டணி முறிந்ததால், அங்கும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

அதனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் காட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது சிவசேனா. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

2015 ம் ஆண்டில் 13 மாநிலங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது  பாஜக. அடுத்த ஆண்டில்  15 மாநிலங்களில் ஆட்சி செய்தது பாஜக.,   2017 ம் ஆண்டில்  19 மாநிலங்களையும்   2018 ம் ஆண்டில்  21  மாநிலங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இதனால், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாஜகவின் செல்வாக்கு விரிவடைந்து கொண்டே சென்றது.

ஆனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஷ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தது.

இந்த ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில், பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்த போதும், அதை தொடர்ந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகிறது.