சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி: ஸ்டாலின் – கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னையில் என்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சைதாப்பேட்டையில் தி.மு.க. சார்பில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.

இன்று காலை சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கிய பேரணி  புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள்  மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்,  ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். விவசாயிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளும் இப்பேரணியில் கலந்து கொண்டன.

சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்  அமைக்கப்பட்டுள்ள  மேடையில் மத்திய அரசை கண்டித்து தலைவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்றது பேரணி அல்ல போர் அணி.  குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.

திமுக பிரபலம் அடைய விளம்பரத்திற்காக துணை நின்ற அதிமுகவுக்கு நன்றி. பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி என கூறினார்.