குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்?  மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி!

குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராடி வருகின்றன.

இந்நிலையில்,. இதே கருத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து புனேயில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

முஸ்லிம்கள் அல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்த சட்டவிரோதமாக  குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

அப்படியானால் இந்த சட்டத்தில் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏன்?. இலங்கை தமிழர்கள் மத்திய அரசு பட்டியலிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் இல்லையா?

குடியுரிமை சட்டத்திருத்தத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று 8 மாநிலங்கள் கூறி உள்ளன.

இதில் பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் மாநிலமும் ஒன்று. இந்த மாநிலங்களை போல மராட்டியமும் முடிவு எடுக்க வேண்டும்.

நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே,  இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த பிரச்சினைகளில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.

இதனால், இந்தியாவில் பல ஆண்டுகளாக வசிக்கும், நேபாள மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சரத்பவார் கூறியுள்ளார்.