திரைச்சுவை: டென்ட் கொட்டாயை அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்சென்ட்!

தென்னிந்தியாவில், சினிமாவை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். டென்ட் கொட்டாய் என்பதை முதன் முதலில் கொண்டு வந்தவர் இவரே.

1883 ம் ஆண்டு கோவை, கோட்டைமேடு பகுதியில் பிறந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் தமது இருபத்தி இரண்டாவது வயதில் பணிக்கு சேர்ந்தார்.

அந்த சமயத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டியூபாண்ட் என்பவர், அப்பகுதியில், ப்ரொஜெக்டர் மற்றும் சில படச்சுருள்கள் மூலம், படம் காட்டி வந்தார்.

அவருக்கு உடல்நிலை சரியிலாத காரணத்தால், தமது சொந்த ஊருக்கு செல்ல விரும்பினார் டியூபான்ட். அவரிடம் இருந்த ப்ரொஜெக்டர் மற்றும் படச்சுருள்களை விலைக்கு வாங்கினார் சாமிக்கண்ணு வின்சென்ட்.

பின்னர், அதன்மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ப்ரொஜெக்டர் மூலம் இயேசுவின் வாழ்க்கை என்ற படம் காட்டினார்.

அதற்காக அந்தந்த இடங்களில் டென்ட், திரைச்சீலை அமைத்து படம் காட்டினார். அதுவே பிற்காலத்தில் டென்ட் கொட்டாயாக மாறியது.

அதன் பின்னர் டிலைட் திரையரங்கம் என்ற பெயரில் நிரந்தர திரையரங்கம் ஒன்றை அமைத்தார். அதன் பின்னர் சென்னையிலும் பல திரை அரங்குகள் உருவாக ஆரம்பித்தன.

அதே காலகட்டத்தில், அமெரிக்க சினிமா ப்ரொஜெக்டர் நிறுவனம் ஒன்றின் முகவராகவும் இருந்த இவர், அதன்மூலம், தென்னிந்தியாவின் பல இடங்களுக்கும் ப்ரொஜெக்டர்களை கொண்டு சேர்த்தார்.

அவரது குடும்பத்தினரும், திரையரங்க தொழிலில் இறங்கியதால், ஒரே நேரத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட டென்ட் கொட்டாய்களை, அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர்.

ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட படங்களை மட்டுமே திரையிட்டு வந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பின்னர் மக்களின் ரசனைக்கேற்ப படங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

1933 ம் ஆண்டில் கல்கத்தாவின் பயனியர் பிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளித்திருமணம் என்ற படத்தை தயாரித்தார். டி.பி.ராஜலட்சுமி வள்ளியாக நடித்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து ஹரிச்சந்திரா, சுபத்ரா பரிணயம் போன்ற படங்களையும் தயாரித்தார். இது தவிர பல எலெக்ட்ரிக் நிறுவனங்கள், அச்சகங்கள், அரிசி ஆலைகள், குளிர்பான நிறுவனங்கள் போன்றவற்றையும் வெற்றிகரமாக நடத்தினார்.

ப்ரொஜெக்டர் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கு சினிமாவை கொண்டு சேர்த்து, டென்ட் கொட்டாய்களை அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்சென்ட், 1942 ம் ஆண்டு காலமானார்.

தென்னிந்தியா சினிமாவில் சாமிக்கண்ணு வின்சென்டின் பங்களிப்பு முகவும் முக்கியமானது என்பதால், தென்னிந்தியா சினிமாவின் தந்தை என்றே இன்றும் போற்றப்படுகிறார்.