இந்திய அரசு எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்: இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை!

இந்திய அரசு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இருந்து வரும் எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்கள் குழந்தைகள் நிச்சயம் அகதிகளாக வாழக்கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ் இணைய தளம் ஒன்றுக்கு இலங்கை தமிழ் அகதிகள் அளித்த பேட்டியில், அகதிகளாக வாழ்வது எப்படிப்பட்ட துன்பம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

1989,  1990-ம் ஆண்டுகளில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஐரோப்பியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

ஐரோப்பாவுக்குச் செல்ல முடியாத மக்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.

இந்தியாவுக்குள் நுழைந்த தமிழ் மக்களின் பொருளாதார நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் குடியுரிமைக்கான தேவை நன்கு புலனாகும்.

ஐ.நா.வின் அகதிகள் சாசனத்தில் ஐரோப்பிய நாடுகள் கையொப்பம் இட்டிருப்பதால் அங்கு அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதனால், அந்நாட்டிடமிருந்து தேவையான அனைத்து உரிமையையும் அம்மக்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் இந்தியா, அகதிகள் தொடர்பான எந்த சாசனத்திலும் கையொப்பமிடவில்லை. இதன் காரணமாக இங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அவர்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றன.

இவர்கள் அனைவருக்கும் கடந்த வாரம் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தையும் அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலிருந்து வரும் தமிழ் மக்களுக்கு குடியுரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று இரட்டைக் குடியுரிமை. ஆனால், இந்திய அரசு அதற்குத் தயாராகவே இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கி, அவர்களை இலங்கையில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த சர்வதேச அளவில் முக்கியக் காரணியாக இந்தியா செயல்பட வேண்டிய பொறுப்புள்ளது.