திமுக பேரணியில் பங்கேற்க மறுத்த மக்கள் நீதி மய்யம்: காரணம் என்ன?

தமிழகத்தில் அதிமுக – திமுக என்ற இரு கட்சிகளை மையப்படுத்தியே அரசியல் சென்று கொண்டிருக்கிறது. இதில் அதிமுகவை சார்ந்து சில கட்சிகளும், திமுகவை சார்ந்து சில கட்சிகளும் பயணித்து கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதா, கலைஞர் என்ற இரு பெரும் ஆளுமைகள் தமிழக அரசியல் களத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், கமல், ரஜினி போன்றோர் சற்று அடக்கியே வாசித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ரஜினி, விரைவில் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். ஆனால், இதுவரை ரஜினி அரசியலில் இறங்குவதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

ஆனால், கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார் கமலஹாசன். அவரது கட்சி  மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளையும் பெற்றது.

அதுவரை கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பற்றி, திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், கடந்த மாதம், கமலின் அறுபதாண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி நடைபெற்ற விழாவில், ரஜினி பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவைப்பட்டால், அரசியலில் கமலுடன் இணைந்து கை கோர்க்க தயார் என்று அந்த விழாவில் ரஜினி பேசினார். இதனால், அரசியல் நிலவரம் சற்று மாறியது.

அதற்கு பின்னர், கமல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த நிலையில், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக, திமுக கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்று கமலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் என்று அவர் கூறி இருந்தார்.

ஆனால், திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில், பங்கேற்க கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு கமலை அழைத்தால், ஊடகங்களின் ஒட்டு மொத்த முக்கியத்துவமும் அவர் பக்கமே இருக்கும் என்று கருதியதால், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால், மக்கள் நீதி மய்யத்தைப் பேரணியில் கலந்துகொள்ள அழைப்பதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் இருவரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

திமுகவின் அழைப்பையும் கமல் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து திமுக நடத்தும் பேரணியில் கமல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திமுக நடத்தும் பேரணியில், மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாதது, தமிழக அரசியல் தலைவர்களை  பல்வேறு கோணங்களில் யோசிக்க வைத்துள்ளது.