உதயநிதியை முன்னிலைப்படுத்தும் ஸ்டாலின்: திமுக போராட்டத்தை விமர்சிக்கும் அமைச்சர் ஜெயகுமார்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

அதிமுகவின் 11 எம்பிக்களும், பாமகவின் அன்புமணியும் எதிராக வாக்களித்து இருந்தால், மாநிலங்களவையில் இந்த மசோதா தோல்வி அடைந்திருக்கும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.

இதன் மூலம் சிறுபான்மை இன மக்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டதாகவும் அக்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளின் சார்பில் வரும் 23 ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை நேரடியாக கூறாமல், மறைமுகமாக கலவரமும், வன்முறையும் ஒருபோதும் தீர்வாகி விடாது என்று நடிகர் ரஜினி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு, சில கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் நேரடியாக கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்த உதயநிதி, ‘உரிமைக்கான போராட்டத்தை கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான வயதான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும் என்று நடிகர் ரஜினியை மறைமுகமாக சாடியுள்ளார்.

இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயகுமார், மு.க.ஸ்டாலினுக்கே இப்போது தலைவர் உதயநிதிதான் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது:-

இப்போது ஸ்டாலினுக்கே தலைவர் உதயநிதிதான். அண்ணா தலைவர் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவருடைய அப்பா கருணாநிதியே தலைவர் கிடையாது. அவருடைய கவலையெல்லாம் உதயநிதி மீதுதான்.

நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.