குடியுரிமை சட்டத்தில் அதிமுக எம்பிக்கள் செய்தது வரலாற்று துரோகம்: ப.சிதம்பரம் பேச்சு!

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் வாக்களித்தது வரலாற்று துரோகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக,புதுக்கோட்டையில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் 40 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, பாஜக ஆட்சியால் நாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

நான் பட்டியலிட்ட எந்த ஒரு பிரச்சினைக்கும் பாஜக தீர்வு காணவில்லை. அதற்கு பதிலாக முத்தலாக் பிரச்சினையை கையில் எடுத்து  பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது.

முத்தலாக் தடை, காஷ்மீரை பிரித்தது, அசாம் குடிமக்கள் பதிவேடு ஆகியவை தான் பாஜகவின் சாதனை.

மக்கள் மீது தொடர்ச்சியாக சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்தது, தற்போது நான்காவது சம்மட்டி அடியாக குடியுரிமை சட்டத்தை கையிலெடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி, இந்தியாவில் உள்ள ஒரு சமுதாய மக்கள் மீது விழுந்த சம்மட்டி அடியை எதிர்த்து பலமுறை குரல் கொடுத்தது, தற்போது நடைபெறும் போராட்டம் இந்திய இறையாண்மை மற்றும் அரசுடனான போராட்டம், இந்திய சமுதாயத்திற்கும் அரசுக்கும் உடனான போராட்டம், இந்திய அரசியல் சாசன சட்டத்தை பாதுகாத்தால் இஸ்லாமியர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

நாட்டில் வாழும் ஒருவன் குடிமகன் இல்லை என்றால் அரசுதான் நிரூபிக்க வேண்டும் அதை மக்கள் நிரூபிக்க மாட்டார்கள்.

குடிமகன் என்பதற்கு நிலத்தில் வாழ்வதே சாட்சி.  இந்திய நாட்டை ஜெர்மன் நாடாக மாற்ற, ஒரு கூட்டம் அதை கையில் எடுத்துள்ளது அதை நாம் தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு கேவலமான அரசியல் நிலை உள்ளது. அதிமுகவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் மனசாட்சி இல்லாமல் பாஜகவோடு ஓடுகின்றனர்.

அவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறாமல் இருந்திருக்கும்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் செய்தது வரலாற்றுத் துரோகம். அந்த துரோகத்தை ஒருபோதும் யாரும் மறக்கக்கூடாது.

இந்த வரலாற்றுத் துரோகத்தை நிதிஷ்குமாரும் செய்தார். தற்போது அதை அவர் மனசாட்சி உறுத்தியதால் மறுபரிசீலனை செய்து உள்ளார்.

போராட்டங்களைப் பார்த்தாவது அதிமுகவின் மனசாட்சி உறுத்த வேண்டும்.  அதிமுகவிற்கு மனசாட்சி உறுத்தவில்லை.  மனசாட்சி இருந்தால் தானே உறுத்தும்.

மனசாட்சி இருந்தால் தானே மறுபரிசீலனை செய்யும்.  தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை பார்த்தாவது அதிமுக மனசாட்சி உறுத்தும் என நம்புகிறேன்  என்று அவர் பேசினார்.