தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்: உள்ளாட்சி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் அதிமுக!

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் வலுவடைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் இப்போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

ஏற்கனவே, மமக சார்பில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை தமிழக முதல்வரை யோசிக்க வைத்துள்ளது. அதேபோல், திருச்சியில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியும் ஆளும் கட்சியை அதிர வைத்துள்ளது.

வழக்கம் போல இத்தகைய போராட்டங்கள், சில நாட்களில் நீர்த்து போய்விடும் என்று மத்திய அரசும், தமிழக அரசும் எண்ணி இருந்தன.

ஆனால், நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுவடைந்து வருவது, இரு தரப்பையும் மிகவும் யோசிக்க வைத்துள்ளது. அரசியல் கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள், நாட்டின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன.

தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கி சூடு என நடத்தினாலும், போராட்டங்களின் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

தலைநகரான டெல்லியிலேயே இணைய சேவைகளை முடக்கும் அளவுக்கு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தது, மத்திய அரசை சற்று யோசிக்க வைத்துள்ளது.

அதனால், குடிமக்கள் இது பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் அளவுக்கு இறங்கி வந்துள்ளது.

சென்னையில் மமக சார்பில் நடந்த போராட்டமும்,, திருச்சியில் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியும், வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களும், முதல்வருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த காரணமாகி உள்ளன.

இதுவரை இல்லாத வகையில், போராட்டத்தில் பங்கேற்கும் பலர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடுத்தும், போராட்டத்தின் வீரியம் குறையாமல் இருப்பதால், இது உள்ளாட்சி தேர்தலில், தமக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்ற அச்சத்தில் அதிமுக கவலைப்படுவதாக கூறப்படுகிறது.