திமுகவை குறிவைக்கும் பாஜக: எடப்பாடிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்!

ஜார்கண்ட் தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தை நோக்கி தங்களது கவனத்தை திருப்ப திட்டமிட்டிருந்த மோடியும், அமித்ஷாவும், அதற்கான பூர்வாங்க வேலைகளை இப்போதே தொடங்கி விட்டனர்.

தமிழகத்தில் அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும் வலுவாக இருக்கும் வரையில், மூன்றாவது கட்சிக்கு வேலை இல்லை. அதிலும் குறிப்பாக பாஜகவுக்கு சுத்தமாக வேலை இல்லை.

எவ்வளவுதான் முயற்சித்தாலும், தமிழகத்தில் பாஜக ஆட்சி என்பது சாத்தியம் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்துள்ள பாஜக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவை தமது கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொண்டு வந்து விட்டது.

அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கோப்புகள் அனைத்தும் பாஜக வசம் இருப்பதால், அவர்களால் எதையும் சுதந்திரமாக செய்ய முடியாது.

ஆனால், பாஜகவுக்கு மிகுந்த சிம்ம சொப்பனமாக இருப்பது திமுகதான். அதனால், திமுகவை கொஞ்சம், கொஞ்சமாக சிதைத்து, அதை பலவீனப்படுத்துவதுதான் தற்போதய வேலை.

அதற்காக, கலைஞர் குடும்பத்தை சேர்ந்த சிலரையும், திமுகவின் முக்கிய புள்ளிகளையும் வழக்குகளில் சிக்க வைப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது பாஜக.

அத்துடன் தமிழக உளவுத்துறை சார்பிலும், அதற்கான ஆதாரங்களை திரட்டும்படி, முதல்வர் எடப்பாடிக்கு பாஜக தலைமை சார்பில், ஒரு அசைன்மென்ட்  கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவை தமது இஷ்டம்போல பயன்படுத்திக் கொள்வதில் பாஜகவுக்கு பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், திமுகவை பலவீனப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அதே சமயம், எடப்பாடியின் தலைமையிலான அதிமுக, அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால், திமுகவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதை தடுக்க, ரஜினி போன்றவர்களை முன்னிறுத்தி, அதன் வழியே தமிழகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறது பாஜக.

அதற்காக, ரஜினிக்கு எதிராக கருத்து கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும், முதல்வர் எடப்படிக்கு, பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.