அ.தி.மு.க பொதுச் செயலாளர் அதிகாரம் யாரிடம் உள்ளது: எஸ்.ஆர்.பி யால் வெளிவந்த சர்ச்சை!

மாநிலங்களவையில், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அரசின் துணை செயலாளர் மூலம் எங்களுக்கு உத்தரவு வந்தது என்று அதிமுக மாநிலங்களவை  உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறி இருந்தார்.

இதன்படியே, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள், குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதிமுகவின் உயர்ந்த பொறுப்பான பொது செயலாளர் பொறுப்பில் இருந்து, பிறப்பிக்க வேண்டிய ஒரு உத்தரவை ஒரு அரசு அதிகாரி பிறப்பித்திருக்கிறார் என்றால், கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கேள்வி எழுகிறது.

எந்த கட்சியிலும் இல்லாத வகையில், அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்துதான், பொது செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அதிமுகவின் கட்சி விதி.

அதிமுகவின் நிறுவனர் இருந்தவரை, இந்த விதி முறையாக பின்பற்றப்பட்டு வந்தது. ஜெயலலிதாவும் அந்த விதியை மாற்றாமல் கடைசி வரை கடைப்பிடித்து வந்தார்.

கட்சியின் எந்த விதியையும் மாற்ற பொதுக்குழுவுக்கு உரிமை உண்டு. ஆனால், கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்ற முடியாது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் கொண்டு வந்து, ஒன்றை பன்னீர்செல்வமும், மற்றொன்றை எடப்பாடியும் எடுத்து கொண்டனர்.

உண்மையில், அவர்களுக்கும் அதிகாரம் இருக்கிறதா? என்றால் அதுவும் தெரியவில்லை.

அப்படி இருந்தால், எடப்பாடியோ அல்லது பன்னீரோதான், மாநிலங்களவையில் யாருக்கு வாக்களிப்பது என்று கூறி இருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை.

அரசின் துணை செயலாளர் வாக்களிப்பது குறித்து எம்.பி க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் என்றால், கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? எடப்பாடி கையிலா? பன்னீர் கையிலா? அல்லது எதிக்கட்சிகள் விமர்சிப்பது போல மத்திய அரசின் கையிலா? அன்று அதிமுகவினர் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், கொரடா, மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என்று பல பதவிகள் வகித்து அனுபவம் நிறைந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனே இப்படி கூறுகிறார் என்றால், அதிமுகவின் பொது செயலாளர் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?

அனுபவம் நிறைந்த எஸ்.ஆர்.பி போன்றவர்களே இப்படி சொன்னால், உண்மையில் அதிமுகவில் பொது செயலாளர் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று திமுக பொருளாளர் துரைமுருகனும் கேள்வி எழுப்புகிறார்.

ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறை அ.தி.மு.க-வின் அமைப்பு தேர்தல்கள் நடத்தப்படும். கடைசியாக 2014-ம் ஆண்டு உள்கட்சித் தேர்தல் நடைபெற்ற போது ‘பொதுச் செயலாளர்’ பதவிக்கு ஜெயலலிதா போட்டியிட்டார்.

ஜெயலலிதா சார்பில் வேட்புமனுவைப் பன்னீர்செல்வம்தான், தேர்தல் அதிகாரியாக இருந்த அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியனிடம் தேதி வழங்கினார்.  ஜெயலலிதாவின் வேட்புமனுவை வழிமொழிந்து பன்னீர்செல்வம் கையெழுத்தும் போட்டிருந்தார்.

ஜெயலலிதா மீண்டும் அ.தி.மு.க பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செலுத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 2,467 பேர் விருப்ப மனு அளித்தார்கள்.

அவர்களில் பன்னீர்செல்வமும் எடப்பாடியும் அடக்கம். வேறுயாரும் மனுத் தாக்கல் செய்யாததால் 7-வது முறையாகப் போட்டியின்றி பொதுச் செயலாளராக அன்றைக்குத் தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா.

தலைவி இருந்து உத்தரவிட்ட பதவியில் சசிகலாவே உட்காரக் கூடாது என ‘தர்மயுத்தம்’ நடத்திய பன்னீர்செல்வம், இப்போது அரசின் துணைச் செயலாளரை அமரவைத்துவிட்டார்.

அ.தி.மு.க அதன் தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? அல்லது பி.ஜே.பி அரசின் ஏஜெண்டுகளாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா? என துரைமுருகன் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.