திரைச்சுவை: சினிமா ராணியாக வலம் வந்த டி.பி.ராஜலட்சுமி!

1931 ம் ஆண்டுதான் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ்  வெளியானது என்பதை அறிந்தோம். அதில் கதாநாயகியாக நடித்தவர் டி.பி.ராஜலட்சுமி என்பவர்.

இவர் வெறும் நடிகையாக மட்டும் அல்லாமல், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனராகவும் என பன்முகத்திறமை கொண்டவர். பல்வேறு நாவல்களை எழுதியும முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் தேதி தஞ்சை மாவட்டம், திருவையாறில் பஞ்சாபகேசன் மீனாட்சி தம்பதியருக்கு மகளாக பிறந்தார்.

திருவையாறு பஞ்சாபகேசன் ராஜலட்சுமி என்பதே டி.பி.ராஜலட்சுமி என்று ஆனது. 1931 ம் ஆண்டு தொடங்கி 1943 ம் ஆண்டு வரை மொத்தம் 14 படங்களில் இவர் நடித்தார்.

ராஜலட்சுமிக்கு எட்டு வயது இருக்கும்போது அவருக்கு திருமணம் நடந்தது. வரதட்சனை கொடுமை காரணமாக அவர் பிறந்த வீட்டுக்கே வந்து விட்டார்.

அவர் தந்தை இறக்கவே, வறுமையால் விதவைத் தாயுடன் திருச்சி வந்தார். அங்கு சுவாமி சங்கரதாஸ் அறிமுகத்தால், சாமண்ணா நாடக கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பதினொரு வயதில் அவர் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அவர் நடித்த முதல் நாடகம் பவளக்கொடி. அதன் பின்னர் மற்றொரு நாடக கம்பெனியில் கதாநாயகியாக நடித்தார். அந்தக்குழு இலங்கை பர்மா போன்ற நாடுடளுக்கும் செர்ன்று நாடகம் நடத்தியது.

பின்னர், எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜா பாகவதர், வி.ஏ.செல்லப்பா போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார்.

பின்னர், நடராஜ முதலியார் இயக்கி தயாரித்த கீசக வதம், நாராயணனின், கோவலன் போன்ற ஊமை படங்களிலும் நடித்தார்.

பின்னர் காளிதாஸ் படத்தில் இவர் திரையில் தோன்றி நடித்ததுடன் பாடல்களையும் பாடி பிரபலம் அடைந்தார். தேசபக்தி பாடல்கள் பாடிய காரணத்திற்காக ஆங்கிலேய அரசால் சிறை வாசமும் அனுபவித்தார்.

தமிழ் சினிமாவின் முதல் குறும்படமான “குறத்தி பாட்டும் நடனமும்” என்ற படத்திலும் இவர் நடித்தார்.

காளிதாஸ் படத்தை தொடர்ந்து, ராமாயணம் என்ற படத்தில் சீதை, சூர்ப்பனகை என்ற இரு வேடத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து அவருக்கு சினிமா ராணி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்தார்.

1933  ம் ஆண்டு ராஜலட்சுமி நடிப்பில் வெளியான வள்ளித்திருமணம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அந்த காலகட்டத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை மணந்த ராஜலட்சுமி, கல்கத்தாவில் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அங்கிருந்து திரவ்பதி, அரிச்சந்திரா, குலேபகாவலி போன்ற படங்களிலும் நடித்தார்.

கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி, மிஸ் கமலா என்ற பெயரில் தாமே கதை வசனம் எழுதி, தயாரித்து ஒரு படத்தை  இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதைத் தொடர்ந்து மதுரை வீரன் என்ற படத்தையும் இயக்கினார். இவரது சகோதரர் டி.பி.ராஜகோபால் இதற்கு இசை அமைத்தார். மற்றொரு சகோதரர் டி.பி.ராஜசேகரன் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார்.

இதுதவிர கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகர், விமலா, சுந்தரி, வாசந்திகா, உரையின் வாள் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

இவருக்கு கமலாமணி என்ற சொந்த மகளும், மல்லிகா என்ற வளர்ப்பு மகளும் உள்ளனர். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட டி.பி.ராஜலட்சுமி, 1964 ம் ஆண்டு மறைந்தார்.

தமிழகத்தில் நாடகங்களில் கூட பெண்கள் தயங்கிய காலத்தில், நாடகத்திலும், திரையிலும் தோன்றி ஆடி, பாடி, நடித்து, கதை வசனம் எழுதி, இயக்கி, தயாரித்து .சாதனை படைத்த டி.பி.ராஜலட்சுமி, தமிழ் சினிமாவின் ராணி என்றே அழைக்கப்படுகிறார்.