குடியுரிமைச் சட்டத்திருத்தம்: பரிந்துரைகளை ஏற்கத் தயார் என  மத்திய அரசு அறிவிப்பு

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் அதில் செய்ய வேண்டிய பரிந்துரைகளை அளித்தால் அதனை பரிசீலிக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது.

இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சட்டத்தில் தங்களுக்குள்ள மாற்றுக் கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கலாம். அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது.

அதுபோலவே இந்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை பல்வேறு வகையிலும் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.