உள்ளாட்சி தேர்தல்: உள்கட்சி – கூட்டணி கட்சிகளை சமாளிக்க திணறும் அதிமுக திமுக!

உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த பகுதியில் மக்கள் செல்வாக்குடன் திகழும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கும் தேர்தல்தான். அதில், பல இடங்களில் கட்சி என்பது பின்னுக்கு தள்ளப்படும்.

என்னதான் கட்சி மேல்மட்டம் கூட்டணி தர்மம் என்று பேசினாலும், உள்ளாட்சியில் – உள்ளூரில் கூட்டணி தர்மத்தை எதிர்பார்க்க முடியாது.

அதனால்தான், உள்ளாட்சி தேர்தல் என்பது அரசியலை கடந்து பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் கூட, பல சமயங்களில் கூட்டணி தர்மம், கட்சிக்கட்டுப்பாடு போன்றவற்றை மீற வேண்டிய நிர்பந்தம் பலருக்கு ஏற்படும். ஊரக உள்ளாட்சி என்றால், கேட்கவே வேண்டாம்.

அதிமுக – திமுக  கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல வார்டுகளில், திமுக -அதிமுகவினரே போட்டியிடுவதால், கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

ஏற்கனவே, பல மாவட்டங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்று செய்திகள் வெளியாயின. தற்போது அதிமுக-பாமக இடையேயும் இத்தகைய செய்திகள் வெளியாகி வருகின்றன.

கும்பகோணம் பகுதியில், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அதிமுகவினரே போட்டியிடுவதால், அங்கு பாமக தொண்டர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, சொந்த கட்சிக்காரர்களும் தலைமையை மதிப்பதில்லை. கூட்டணி கட்சியினரும் தங்கள் தலைமை சொல்வதை கேட்பதில்லை.

இது, இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் அல்ல. இதற்கு முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் இப்படித்தான் இருந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் வெற்றியை ஒட்டி தேர்தல் நடந்தால், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளால் தமது தொண்டர்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் வர இருப்பதால், சொந்த கட்சியை சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் என எவரையும் கட்டுப்படுத்துவது, எல்லா  கட்சிகளுக்குமே தலைவலிதான்.

இதன் காரணமாகவே, உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு வேண்டாம் என்ற மனநிலையில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் இருந்தன.

நீதிமன்ற உத்தரவை ஏற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் வேறு வழியின்றி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் ஏற்படும் குழப்பங்கள், வரும் சட்டமன்ற தேர்தலில், கூட்டணி விஷயத்தில்  என்னென்ன பிரச்சினையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் திமுக, அதிமுக மட்டுமல்லாது, அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகன் என்பவர், தமக்கு சீட் கிடைக்காததால், முதல்வர் வீட்டின் முன்பே தீக்குளிக்க முயன்ற சம்பவமும், இந்த குளறுபடிக்கான உதாரணம்தான்.