திரைச்சுவை: தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’

தமிழ் சினிமா, ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழகத்திற்கு ஐந்து முதல்வர்களை தந்துள்ளது.

கடவுள்கள் தொடங்கி மன்னர்கள், காவிய நாயகர்கள், நாயகிகள் என பல்வேறு உருவங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய கனவு தொழிற்சாலையும் அதுதான்.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் எத்தனையோ சுவையான தகவல்கள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை நாம் பார்ப்போம்.

காளிதாஸ் வெளியாகும் வரை, தமிழில் ஊமைப்படங்கள் என்ற சலன படங்களே வெளி வந்தன.

முதன் முதலில் தமிழில் வெளியான பேசும் படம் ‘காளிதாஸ்’. இந்த படம் 1931 ம் ஆண்டு அக்டோபர்  31 ம் தேதி திரைக்கு வந்தது.

எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில், பி.ஜி.வெங்கடேசன் கதாநாயகனாகவும், டி.பி.ராஜலக்ஷ்மி கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். எல்.வி.பிரசாத்தும் இதில் நடித்திருந்தார்.

இந்தப்படத்தில் எண்ணற்ற பாடல்கள் இடம்பெற்று இருந்தன. மதுரகவி  பாஸ்கரதாஸ் என்பவர் இந்த படத்திற்கான பாடல்களை எழுதி இருந்தார். அதனால், அவரே, தமிழின் முதல் பாடல் ஆசிரியர் என்ற  சிறப்பை பெறுகிறார்.

‘ராட்டினமாம் காந்தி கைபானமாம்’, ‘இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை’ போன்ற பாடல்களை அந்த காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் பாராட்டி எழுதி உள்ளன.

காளிதாஸ் தமிழ்படம் என்றாலும், அதில் வரும் கதாநாயகன் தெலுங்கிலும், கதாநாயகி தமிழிலும், சில பாத்திரங்கள் இந்தியிலும் பேசினார்கள். எனவே, இந்தப்படம் தெலுங்கின் முதல் பேசும்படமாகவும் அமைந்தது.

இது முதல் பேசும்படம் என்பதால், விமர்சனங்கள் எல்லாம் பெரிதாக எழவில்லை. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசி நடிப்பதே, ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருந்தது.

இந்தியாவின் முதல்படமான “ஆலம்ஆரா” வும், அதே வருடத்தில் சற்று முன்னதாக வெளியானது.

காளிதாஸ் படத்தின் படச்சுருள் பெட்டி, மும்பையில் இருந்து, ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது.

அங்கிருந்து ‘கினிமா சென்ட்ரல்’ என்ற திரையரங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தக்கால சினிமா ரசிகர்கள், அந்த படப்பெட்டிக்கு ஆரத்தி எடுத்து, மாலை மரியாதைகள் எல்லாம் செய்து, தியேட்டருக்கு ஊர்வலமாக கொண்டு சேர்த்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில், சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தும், மும்பையில்தான் நடைபெற்று வந்தது. அதன் பின்னரே, சென்னை சினிமா நகரமாக உருவெடுத்தது.

இப்படத்தின் கதாநாயகியாக நடித்த டி.பி.ராஜலக்ஷ்மி, பின்னாளில் மிகப்பெரிய கதாநாயகியாகவும், முதல் பெண் இயக்குனராகவும் ஜொலித்தார்.

இயக்குனர் எச்.எம்.ரெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர், கதாநாயகன் பி.ஜி.வெங்கடேசன் ஆந்திராவை சேர்ந்தவர், கதாநாயகி டி.பி.ராஜலக்ஷ்மி, தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர்.

இந்தப்படத்தின் உதவி இயக்குனராகவும், குணசித்திர நடிகராகவும் இருந்தவர் லக்ஷ்மி வரபிரசாத் என்ற எல்.வி.பிரசாத்.

இவர், பின்னாளில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்ந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவை உருவாக்கியவரும் இவரே.

இன்னும் எத்தனையோ திரைச்சுவைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.