ஊழல் வழக்கில் அன்புமணியைக் காப்பாற்ற குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு: ராமதாசுக்கு டி.ஆர்.பாலு பதில்!

ஊழல் வழக்கில் இருந்து அன்புமணியை காப்பாற்றுவதற்காக, ஈழத்தமிழர் உரிமையை ராமதாஸ் காவுகொடுத்துள்ளார் என்று திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டி.ஆர்.பாலு இன்று  வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம் வருமாறு:-

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வெற்றி பெற்றதற்குக் காரணம், அதிமுக அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது.

இந்தத் துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும், ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்தான் காரணம். நாடு இன்று பற்றி எரிய இவர்களே காரணம்.

தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அந்தச் சட்டத்திருத்தத்தை ஆதரித்தார்கள் என்றால், பாமக ஆதரிக்க என்ன காரணம்?

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாஸ். சிபிஐ விசாரித்து வரும் வழக்கை மவுனிக்க வைக்க மவுனமாகி விட்டார்கள், இரண்டு மருத்துவர்களும்.

ஈழத்தமிழர்களுக்குத் தேவை, இந்தியக் குடியுரிமை அல்ல; அவர்களுக்குத் தேவை இரட்டைக் குடியுரிமைதான் என்று சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.

அவர்களுக்குத் தேவையானது இரட்டைக் குடியுரிமைதான் என்றால், அதனை நாடாளுமன்றத்தில் அன்புமணி கோரிக்கையாக வைத்தாரா?

இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று, ஈழ அகதிகள் யாராவது இவரிடம் வந்து சொன்னார்களா?

ஈழ அகதிகள்,  எங்களுக்கு இந்தியக் குடியுரிமை தராவிட்டால், எங்களைக் கடலில் கொண்டு போய் தள்ளிவிடுங்கள்” என்று பேட்டி அளித்துள்ளது, ராமதாஸுக்குத் தெரியுமா?

ஈழ அகதிகள், ஏற்கெனவே இலங்கைக் குடியுரிமை கொண்டவர்கள்தான். அவர்களுக்கு இந்தியாவும் குடியுரிமை கொடுத்தால்தான், அது இரட்டைக் குடியுரிமை ஆகும்.

இன்றைய மத்திய அரசு அதைத்தான் மறுத்துவிட்டது. இதுகூட புரியாமல் மிக நீளமாக வாய் வீரம் காட்டுகிறார்.

2019- ம் ஆண்டு நடந்த விவகாரத்தில் ஏன் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள் என்றால், 2009-ம் ஆண்டுக்குப் போய்விட்டார் ராமதாஸ்.

2004  முதல் 2009  வரை, மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் தங்கள் கட்சி அங்கம் வகித்ததையும், தன் மகன் அமைச்சராக இருந்ததையும் மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து வெற்றி பெற்ற போதும், அதன் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இறுதிக் காலம்வரை பதவி சுகத்தை அனுபவித்து, இரண்டு மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்குகளில் சிக்கிய போதும், ஈழத் தமிழர்களின் நலன் ராமதாஸின் கண்களுக்குத் தெரியவில்லை.

இன்றைக்கு அதே ஊழல் வழக்கு, அவரது கண்ணை மறைத்துக் கொண்டு இருக்கிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது விடுத்த கோரிக்கைகள் எல்லாம் அநாதைகளாகக் கிடக்கின்றன. அது என்ன ஆயிற்று என்று கேட்கும் வழக்கமான துணிச்சலைக் கூட ராமதாஸ் இழந்து தத்தளித்து நிற்கிறார்.

அன்புமணி ராமதாஸ் மீதான ஊழல் வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து, இப்போது டெல்லி விசாரணை நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.

இந்த ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால், பாஜக அரசின் அத்தனை தமிழக விரோதத் திட்டங்களையும், அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளையும் ராமதாஸ் ஆதரிக்கிறார்.  இல்லை என்றால் மவுனம் காக்கிறார். அதை மறைக்க திமுக மீது பாய்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார்.