நாட்டு நடப்புகளை திசை திருப்பிய குடியுரிமை சட்டத்திருத்தம்!

 நாட்டின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை பின்னுக்கு தள்ளி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரமே இன்று முக்கிய டிரெண்டிங்காக மாறியுள்ளது.

ஒரு பிரச்சினையை ஊற்றி மூட, மற்றொரு பிரச்சினையை கிளப்பி விடுவது என்பது அரசியல் தந்திரம். மோடி மற்றும் அமீத்ஷாவின் இந்த தந்திரம் தான் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா.

இது தேசிய அளவில், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின்மையை பற்றி எதிர்கட்சிகள் பேசுவதை, வேறு திசையை நோக்கி திரும்ப வைத்துவிட்டது.

வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகம் வரையில் வந்துவிட்டது. மமக கட்சியினர், முதல்வர் வீட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வைத்ததன் பின்னணியும் இதுவே.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக, வரும் 23 ம் தேதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.

சென்னை பல்கலைகழகம் போராட்டத்தை சமாளிக்க முடியாமல், விடுமுறை அறிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

திமுகவின் போராட்டம், வரும் உள்ளாட்சி தேர்தலை கணக்கில் கொண்டு நடத்தப்படுவதாக ஆளும் தரப்பு கூறுகிறது. வேண்டுமென்றே எதிர்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவதாக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டுகிறார். எனினும் அந்த போராட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவரே கூறுகிறார்.

மத்தியில் ஆளும் கட்சியின் அறுதி பெரும்பான்மை, மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற காரணமாக அமைந்தது.

ஆனால், மாநிலங்களவையில், அதிமுக மற்றும் பாமகவின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது என்று திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது ஒரு புறம் இருக்க, தேசிய அளவில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை ஏற்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தில் மன்மோகன்சிங் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது என்ற குற்றச்சாட்டை திசை திருப்ப, என்னென்னவற்றை செய்ய வேண்டுமோ அத்தனையும் அக்கட்சியால் செய்யப்பட்டு வருகிறது.

நாடு தற்போதுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியும், புதுப்புது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுமே தலையாய பிரச்சினையாக உள்ளது.

அதைத்தவிர, அனைத்து வேலைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. எதிர்கட்சிகளின் கவனத்தை திசை திருப்ப, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, இப்போதைக்கு பாஜகவுக்கு தேவைப்படுகிறது என்றுதான் யோசிக்க வேண்டி இருக்கிறது.