குடியுரிமை சட்டத்திருத்தம்: மீண்டும் உருவெடுக்கும்  திமுக – பாமக மோதல்!

தமிழக அரசியலில் அதிமுக – திமுக இடையேயான மோதலைவிட, திமுக – பாமக இடையேயான மோதல்களே அதிக அளவில் டிரெண்டிங் ஆகும் விஷயமாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வன்னியர் விவகாரத்தில்  தொடங்கிய இந்த மோதல், முரசொலி – பஞ்சமி விவகாரம் வரை நீண்டு கொண்டே சென்றது.

இடையில் சற்று ஓய்ந்திருந்த திமுக – பாமக மோதல், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

பாஜகவுக்கு மக்களவையில் அதீத பெரும்பான்மை உள்ளதால், கடந்த  9   ம் தேதி, கொண்டு வந்த முடியுரிமை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது.

ஆனால், பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக மற்றும் பாமக ஆதரவுடன், கடந்த  11 ம் தேதி, மாநிலங்களவையிலும் இம்மசோதா நிறைவேறியது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முதலில் வெடித்த போராட்டம், நாடு முழுவதும் பரவி வருகிறது.

தமிழகத்தில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், அக்கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் இணைந்து வரும் 23 ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, திமுக சார்பில் நடந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேசிய கனிமொழி பாமக எம்பியான அன்புமணியை கடுமையாக சாடி இருந்தார்.

அன்புமணி ராமதாசை மாநிலங்களவையில் யாரும் பார்த்ததே கிடையாது. ஆனால், அன்று வாக்களிப்பதற்காக வந்து,  தனது ஒரே ஒரு வாக்கை, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக போட்டுவிட்டு போய் விட்டார் என்று கனிமொழி கூறி இருந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ள அதிமுகவும் பாமகவும் தமிழினத் துரோகிகள் என்று விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழத்தமிழர்களின் தேவை, இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழும் குடியுரிமைதான் என்று கூறியுள்ளார்.

2009  ம் ஆண்டு ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியது கலைஞர்.

அதே ஆண்டில் இலங்கை தமிழர்களுக்கு, இந்தியாவில் குடியுரிமை கோரி, பிரதமருக்கு கலைஞர் கடிதம் எழுதியது, அதற்கு உலகம் முழுவதும் வாழும் இலங்கை தமிழர்களிடம் இருந்த வந்த எதிர்ப்பால், அந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டது கலைஞர்.

கடந்த 36 ஆண்டுகளில், இலங்கை தமிழர் நலனுக்காக திமுக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போட்டது கிடையாது என்று நீண்ட அறிக்கை ஒன்றில் திமுகவை கடுமையாக சாடி இருக்கிறார் ராமதாஸ்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு, திமுக இழைத்த துரோகங்கள் குறித்து, பொது இடத்தில் விவாதம் நடத்த நான் தயார். மு.க.ஸ்டாலின் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால், குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில், திமுக – பாமக இடையேயான மோதல், மீண்டும் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.