குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையீடு!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், வன்முறையைத் தடுத்து நிறுத்தவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் உள்பட 12  எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சந்தித்து முறையிட்டன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, ஐயுஎம்எல், ஏஐயுடிஎப் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை நேற்று சந்தித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது, சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு அறிவுறுத்தவும், கலவரம், வன்முறையில் தலையிட்டுக் கட்டுப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

சந்திப்புக்குப் பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சேர்ந்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து, வடகிழக்கு மாநிலத்தில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் பரவி வரும் வன்முறையைத் தடுத்து நிறுத்தக் கோரினோம்.

இந்த வன்முறைக்குக் காரணமான சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு அறிவுறுத்தவும் வலியுறுத்தினோம்.

சூழல் நாளுக்கு நாள் பதற்றமாகி வருகிறது. நாடு முழுவதும் மேலும் கலவரம் பரவும் என்று அஞ்சுகிறோம். நாடு முழுவதும் போராட்டம் அமைதியாக நடந்து வரும்போது அதில் போலீஸார் நடந்து கொண்ட முறை கோபத்தை ஏற்படுத்துகிறது.

டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலை.யில் பெண்கள் விடுதிக்குள் சென்று இரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லியில் மட்டுமல்ல போராட்டம் நடத்தும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்துகிறார்கள். போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை, நடத்துகிறார்கள்.

ஜனநாயகத்தில் மக்கள் ஏற்காத இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தவும், மக்களின் குரலை அடக்கவும் மோடி அரசுக்கு எந்தவிதமான கட்டாயமும் இல்லை’’.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில்,  அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் குடியரசுத் தலைவர்தான். அரசியலமைப்புச் சட்டத்தை இதுபோன்று மீறுவது சரியல்ல என்று நாங்கள் தெரிவித்தோம். மத்திய அரசுக்கு அறிவுறுத்தி குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் என்றார்.