உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்!

உள்ளாட்சி தேர்தல் என்றாலே கூட்டணி கட்சிகளுக்கு இடையே, இடங்களை பங்கீடு செய்து கொள்வதில் எப்போதும் சிக்கல் எழுவது வாடிக்கையான ஒன்றுதான்.

தற்போது, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை சரிசெய்வதற்கு கால அவகாசம் போதுமானதாக இல்லாத காரணத்தால், பல மாவட்டங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்பது, அந்தந்த பகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள்.

குறிப்பாக, ஊரகப்பகுதிகள் என்று வந்துவிட்டால், கட்சிகளை பெரிய அளவில் ஏற்றுக்கொள்வது என்பது பல இடங்களில் முடியாத காரியமாகவே இருக்கும்.

மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்புற உள்ளாட்சி மன்றங்களில் கூட இந்த பிரச்சினைகள் பெரிய அளவில் தலை எடுப்பது உண்டு.

உள்ளாட்சி தேர்தலுக்காக தொடர்ந்து தயாராகி வரும் கட்சி பிரமுகர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, திடீரென அந்த பகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்தால், அதை ஏற்க முடியாத மனநிலைக்கு தொண்டர்கள் வந்துவிடுவது இயல்பே.

அப்படி ஒரு சூழல்தான், தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் பல்வேறு மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவினரே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இந்த குமுறல்கள் வெளிப்படையாக இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. மற்ற மாவட்டங்களில், விரைவில் இது தெரிய வரும்.

2006  ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட இத்தகைய போக்கே, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தென்பட்டது. ஊரக பகுதிகளில் மட்டுமன்றி, நகர்புற பகுதிகளிலும் இது எதிரொலித்தது.

கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்ட பல திமுக பிரமுகர்கள், அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

அதுபோலவே, இந்த தேர்தலிலும் நடக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று, மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாமல் இருப்பதே நல்லது என்று, அதிமுக திமுக போன்ற கட்சிகள் விரும்பியதற்கு இதுவே முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.