திருநங்கையாக நடிக்க ஆசை: தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்த ரஜினி!

திருநங்கையாக நடிக்க வேண்டும். அதுவே எனது கனவு கதா பாத்திரம் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக உள்ள தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் ரஜினி, தன்னுடைய திரைத்துறை அனுபவம் மற்றும் கனவு கதாப்பாத்திரம் குறித்து மனம் திறந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-

நான் எப்போதும் ஈஸி- கோயிங் கதாப்பாத்திரங்களையே அதிகம் தேர்வு செய்து நடைப்பேன். எனக்கு காவல்த்துறை அதிகாரியாக வரும் படங்களில் நடிப்பது அவ்வளவு விருப்பம் இல்லை.

ஆனால் ஏ.ஆர்.  முருகதாஸ் மிகவும் வித்தியசமான ஒரு கதையுடன் வந்தார். அது சாதாரண போலீஸ் கதாப்பாத்திரம் கொண்ட கதை இல்லை. அவருடைய கற்பனை சக்தி, அதனை நிஜப்படுத்தி பார்க்கும் திறன் எல்லாம் வித்தியாசமாக இருந்தது.

நான் நிறைய நிறைய கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளேன். 160  படங்களில் பணியாற்றியுள்ளேன். 40   முதல் 45 வருடங்கள் வரையிலான திரை அனுபவம் உள்ளது.

எனக்கு திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது என்னுடைய கனவு கதாப்பாத்திரம்.

இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில், கேமரா முன்பு நின்று நடித்து பல ஆண்டுகளாக ரசிகர்ளுக்காக வாழ்ந்துள்ளேன். ஆனால் ஒரு கலைஞனாக நான் எந்த மாற்றத்தையும் இத்தனை ஆண்டுகளில் காணவில்லை.

உண்மையை சொல்லப்போனால் நான் ‘எவால்வ்’ ஆகவே இல்லை என்று நினைக்கின்றேன். ஆரம்ப காலத்தில் நான் மிகவும் படபடப்புடன் இருந்தேன்.

நான் ஒரு இயக்குநரின் நடிகன். கொடுக்கப்படும் கால சூழலுக்கு ஏற்ப ரியாக்ட் செய்வதே நடிப்பு. நான் மாறிவிட்டேன் என நான் நினைக்கவில்லை.

நாற்பது வருடங்களுக்கு முன்பு, 80 களில் என்னுடைய படங்களில் ஏதோ ஒன்று வெளியானது போது, ப்ரீமியர் ஷோக்கள் எல்லாம் கிடையாது.

திரையங்கு ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது டைட்டில் கார்டில் என்னுடைய பெயர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று வந்திருந்தது.

என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி இப்படி பெயரை போடலாம் என்று கேள்வி எழுப்பினேன். நான் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவேன் என்று நினைக்கவே இல்லை.

இப்போதும் நான்  அப்படியே தான் நினைக்கின்றேன். அவர்கள் ஏன் என்னை சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள் என்று தெரியவே இல்லை.

கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து திரைப்படத்தில் நடிக்க வந்துள்ளார் சுனில் ஷெட்டி. அவருடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடைய தந்தையை கவனிக்க அவர் சென்றுவிட்டார்.

தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அவர். அவரை கேமரா முன்பு அவ்வளவு அழகாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் இறுதியில் எனக்கும் அவருக்கும் இடையே ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. அதில் அவர் எவ்வாறு நடித்திருக்கிறார் என்று பாருங்கள் என்றும் ரஜினிகாந்த் விழாவில் பேசினார்.